காணாமல் போன குளத்தைக் கண்டுபிடித்துத் தருவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு

உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் சேர வேண்டுமா? எளிதான வழி இருக்கிறது. மதுரையில் காணாமல் இரண்டு குளங்களைக் கண்டுபிடித்துக் கொடுத்து பரிசினைத் தட்டிச் செல்லலாம்.
காணாமல் போன குளத்தைக் கண்டுபிடித்துத் தருவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு


மதுரை: உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் சேர வேண்டுமா? எளிதான வழி இருக்கிறது. மதுரையில் காணாமல் இரண்டு குளங்களைக் கண்டுபிடித்துக் கொடுத்து பரிசினைத் தட்டிச் செல்லலாம்.

மதுரை மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் இதைத்தான் சொல்கின்றன.

பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மதுரை மண்டல பொறுப்பாளர் சங்கர்பாண்டி பெயரில் அச்சிடப்பட்டிருக்கும் அந்த போஸ்டரில், வீரபாண்டி சாலையில் இருந்து ஓமட்சிகுளம் பகுதிக்கு செல்லும் வழியில் ஆதி திராவிடர் மாணவர் விடுதிக்கு எதிரே இருந்த கண்மாயைக் காணவில்லை. அதேபோல பண்ணைக்குடி கிராமத்தில் இருந்த அம்மன்குளத்தையும் காணவில்லை.

இவ்விரண்டு குளங்களும் எங்கே அடித்துச் செல்லப்பட்டன என்பது குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்துக்கு வருவோர் அதிகமாகப் பேசும் விஷயம் இதுதான். அலங்காநல்லூர் மற்றும் ஓமட்சிக்குளம் பகுதி மக்களும் இது பற்றியே ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருக்கின்றனர். 

நில அபகரிப்பாளர்களால், இரண்டு குளங்களும் மண்ணைக் கொட்டி மூடப்பட்டதாகவும், ஒன்று பண்ணையாக மாற்றப்பட்டுவிட்டதாகவும், மற்றொன்று வேலி அமைத்து அபகரிக்கப்பட்டுவிட்டதாகவும் சங்கர்பாண்டி கூறுகிறார்.

இந்த மிகப்பெரிய குளங்கள் அபகரிக்கப்பட்டுவிட்டதால், மழைக் காலங்களில் நீரை சேமிக்க வழியே இல்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. முன்பெல்லாம் 200 அடியில் தண்ணீர் கிடைத்தது. தற்போது ஆயிரம் அடியில் தண்ணீர் கிடைத்தால் அது அதிர்ஷ்டம் என்கிறோம். 

இது தொடர்பாக 200 போஸ்டர்களை அடித்து ஒட்டியுள்ள சங்கர்பாண்டி, இந்த போஸ்டர் விவகாரம் தற்போதுதான் மாவட்ட ஆட்சியருக்கு தெரிய வந்திருப்பதாகவும், உடனடியாக அபரிக்காளர்களிடம் இருந்து குளங்கள் மீட்கப்படும் என்று நம்புவதாகவும் கூறுகிறார்.

இது பற்றி தங்களுக்குத் தெரியாது, விசாரணை நடத்த உள்ளோம் என்கிறார்கள் வருவாய்த் துறை அதிகாரிகள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com