குரங்கணி காட்டுத் தீ: ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சுகாதாரத் துறை செயலர் பாராட்டு

தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்ட ஆம்புலன்ஸ் குழுவில் இருந்த இரண்டு இளைஞர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
குரங்கணி காட்டுத் தீ: ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சுகாதாரத் துறை செயலர் பாராட்டு


மதுரை: தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்ட ஆம்புலன்ஸ் குழுவில் இருந்த இரண்டு இளைஞர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்க மீட்புக் குழுவினருடன், மலைவாழ் கிராம மக்களும் பொதுமக்களும் அதிக ஒத்துழைப்பு அளித்தனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில் 3 பேருக்கு மட்டுமே 50 சதவீதத்துக்கும்  குறைவான தீக்காயம் உள்ளது. ஆனால் 13 பேருக்கு 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளது. 

தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் 74 செவிலியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தொடர் சிகிச்சை அளித்து, காயமடைந்தவர்களை விரைவாகக் குணப்படுத்த 33 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும், காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்க மலைப் பகுதிக்கு ஆம்புலன்ஸில் சென்ற ஓட்டுநரும் தொழில்நுட்ப நிபுணரும் மிகத் திறமையாகப் பணியாற்றினர். 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெகதீஷின் பணி பாராட்டுக்குரியது. ஆம்புலன்ஸ் எந்த அளவுக்குச் செல்லுமோ அதையும் தாண்டி ஆம்புலன்ஸை இயக்கி, காயமடைந்தோர் விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு வர உதவியதோடு, அங்கிருக்கும் நிலவரத்தை படம் பிடித்து மீட்புக் குழுவினருக்கும் அனுப்பினார். சம்பவப் பகுதியில் இருந்து காட்சிகளை அனுப்பியதால்தான் மீட்புக் குழுவினரும் விரைவாக செயல்பட வாய்ப்பு ஏற்பட்டது. வெறும் பணியாக நினைக்காமல் மீட்புப் பணி நிறைவு பெறும் வரை முழு ஒத்துழைப்புக் கொடுத்த இரண்டு இளைஞர்களுக்கும் இந்த சமயத்தில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வது அவசியம் என்று தெரிவித்தார்.

அப்போது பேசிய மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர், காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார். அதாவது, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது காயங்கள் மூலமாக நோய்த் தொற்று இல்லாமல் இருக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே சமயம், அவர்களது உடலில் திரவச் சத்து குறையாமல் இருக்கும் வகையிலும் உடனுக்குடன் திரவச் சத்து ஏற்றப்படுகிறது.

தேவைப்பட்டால் ஓட்டுத் தோல் பொருத்தப்பட்டும் சிகிச்சை அளிக்கப்படும். காயமடைந்தவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்  என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com