இன்று பட்ஜெட் தாக்கல்

வரும் நிதியாண்டுக்கான (2018-19) நிதிநிலை அறிக்கை வியாழக்கிழமை (மார்ச் 15) தாக்கல் செய்யப்படவுள்ளது. 
இன்று பட்ஜெட் தாக்கல்

வரும் நிதியாண்டுக்கான (2018-19) நிதிநிலை அறிக்கை வியாழக்கிழமை (மார்ச் 15) தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், ஏழாவது ஊதியக் குழு நடைமுறை, புதிய அரசுத் திட்டங்கள் ஆகியவற்றால் ஏற்பட்ட செலவினங்களைச் சமாளிக்க வருவாயைத் திரட்டுவதற்கான திட்டங்களும் முன்வைக்கப்படும் எனத் தெரிகிறது.
கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்ய அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நண்பகலில் கூடவுள்ளது. இதைத் தொடர்ந்து, பேரவை கூட்டத் தொடர் தேதிகளை பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவிப்பார்.
துறை வாரியான மானியக் கோரிக்கைகள்: அரசின் ஒவ்வொரு துறைகளுக்கும் தேவையான நிதியைக் கோர பேரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதற்காக, தினந்தோறும் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் பேரவையில் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
இது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20 முதல் 25 நாள்களுக்கு நடைபெறும். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பதிலுரை முடிக்கப்பட்ட பிறகு, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றிய பிறகு, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் ஏப்ரலில் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
காவிரி விவகாரம்: நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக பேரவை கூட்டத் தொடர் நான்கு நாள்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் உள்பட பல முக்கியப் பிரச்னைகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளன. இதற்கு அரசுத் தரப்பில் இருந்து உரிய பதில்களை அளிக்க முதல்வரும், அமைச்சர்களும் தயாராகி வருகின்றனர்.
எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: சட்டப் பேரவை கூட்டத் தொடரில் எத்தகைய செயல்பாடுகளை வகுத்துச் செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்க அதிமுக, திமுக எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம் தனித்தனியாக வியாழக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திலும், திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்திலும் நடைபெறவுள்ளன. இந்தக் கூட்டங்களில் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த கட்சிகளின் தலைமைகள் வழங்கவுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com