Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் போராட்டம்

    By  சென்னை,  |   Published on : 24th March 2018 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    congress1

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
     இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான ஆறு வார கால கெடு ஏப்ரல் 1-ஆம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் ஆகியோர் ஆறுவார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது என்று கூறி வருகின்றனர். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் "ஸ்கீம்' (திட்டம்) என்று இருக்கிறதே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று குறிப்பிடப்படவில்லை என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயல்.
     2007-இல் வெளிவந்த நடுவர்மன்ற தீர்ப்பின் அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்காக நீர் பங்கீட்டு அளவை 14.25 டி.எம்.சி. குறைத்ததே தவிர, மற்ற அனைத்தையும் ஏற்றுக் கொண்டது. இதை மூடி மறைத்துவிட்டு, திரிபு வாதம் பேசுவது மத்திய அரசு, தமிழகத்துக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.
     காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தத்தை தராமல் நாடாளுமன்றத்துக்கு வெளியே பெயரளவில் ஆர்ப்பாட்டம் நடத்தி கண்துடைப்பு நாடகத்தை அதிமுக நடத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களைப் பெற்றுள்ள அதிமுக அழுத்தத்தைத் தர, துணிவற்ற நிலையில் உள்ளது.
     எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், இதில் அதிமுகவின் மெத்தனப் போக்கை கண்டித்தும் ஏப்ரல்-1 ஆம் தேதிக்குப் பிறகு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும், விவசாய சங்கங்களையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai