Enable Javscript for better performance
குடும்ப அட்டை: இணைய வழியில் விண்ணப்பிக்க தன்னார்வலர், மாணவரை ஈடுபடுத்த முடிவு- Dinamani

சுடச்சுட

    

    குடும்ப அட்டை: இணைய வழியில் விண்ணப்பிக்க தன்னார்வலர், மாணவரை ஈடுபடுத்த முடிவு

    By சென்னை,  |   Published on : 24th March 2018 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    RATION

    இணைய வழியிலான மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளுக்கு தன்னார்வலர்கள், மாணவ-மாணவிகளை அதிகளவில் ஈடுபடுத்த உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
    தமிழக உணவுத் துறையின் அனைத்துச் செயல்பாடுகளும் இணையதளம் வழியிலேயே நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், பெயர் சேர்ப்பு, நீக்கல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் உணவுத் துறையின் இணையதளம் வழியாகவே (www.tnpds.gov.in) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    அனைத்துக்கும் அலைச்சல்: குடும்ப அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ளவும், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கவும் பொது மக்கள் இணைய சேவை மையம் அல்லது தனியார் இணையதள மையங்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், அவர்கள் நிர்ணயிக்கும் தேதி அல்லது நேரத்துக்கு மட்டுமே பொது மக்கள் செல்ல வேண்டியுள்ளது.
    இதையும் தாண்டி, இணையதள மையங்களில் குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பிக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் ரூ.100 முதல் ரூ.200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து, தியாகராய நகரைச் சேர்ந்த மோகன் கூறுகையில், தனியார் இணையதளங்களில் கட்டண நிர்ணயித்துக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஒவ்வொரு மையமும் அவர்களின் வசதிக்கேற்ப கட்டணத்தை வசூலிக்கிறார்கள். பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் இணைய சேவை மையங்களிலோ நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்றார்.
    தீர்வு காணும் உணவுத் துறை: தனியார் இணையதளங்களில் உள்ள பிரச்னை, இணைய சேவை மையத்தில் காத்திருப்பு போன்றவற்றுக்குத் தீர்வு காண உணவுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து அந்தத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:-
    குடும்ப அட்டையில் விவரங்கள் திருத்தம், புதிய அட்டைக்கு விண்ணப்பம் செய்தல் போன்ற பணிகளில் தன்னார்வலர்களை அதிகளவில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக, கிராமப்புறங்களில் உள்ள தன்னார்வலர்களை அறிவுறுத்தியுள்ளோம். அவர்களிடம் மடிக்கணினி, கணினியுடன் இணையதள இணைப்பு மட்டும் இருந்தால் போதுமானது. உணவுத் துறையின் அனைத்துச் சேவைகளையும் இணையதளத்தின் வாயிலாக மேற்கொள்ள முடியும்.
    மேலும், இப்போது, பள்ளிப் படிப்பில் இறுதி வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கணினியைப் பயன்படுத்தி எளிதாகக் கிடைக்கும் இணையதள இணைப்பு வசதியுடன் உணவுத் துறை சேவைகளை மாணவ-மாணவிகளே மேற்கொள்ளலாம். இதன் மூலம், தங்களது வீட்டில் உள்ளவர்களுக்கும், அக்கம்பக்கத்தில் உள்ளோருக்கும் குடும்ப அட்டை தொடர்பான திருத்தப் பணிகளை மாணவர்களே செய்யலாம்.
    உரிய பயிற்சி அளிக்க... உணவுத் துறையின் இணையதளத்தில் புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கவும், திருத்தல் பணிகளை மேற்கொள்ளவும் மாணவ-மாணவிகளுக்கு உரிய பயிற்சிகளை அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் 10 முதல் 15 மாணவர்களுக்கு இத்தகைய பயிற்சியை அளிப்பதன் மூலமாக, அந்தக் கிராமமே உணவுத் துறை தொடர்பான சேவைகளை இணையதளத்தின் வழியாக எளிதில் பெற முடியும் என்பதே எங்களது திட்டம். இதற்கான உரிய வழிகாட்டி பயிற்சிகள் அடங்கிய குறுந்தகடுகள் ஏற்கெனவே அனைத்து மாவட்டங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளன.
    இந்த வழிகாட்டி பயிற்சி முறைகளை மாணவ-மாணவிகளுக்கு கற்றுக் கொடுக்க மாவட்ட நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
    இதனால், பொது மக்கள் தனியார் இணையதளங்களை நாடிச் செல்வதும், பொது சேவை மையங்களில் நீண்ட நேரமாகக் காத்திருப்பதும் தவிர்க்கப்படும் என உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai