Enable Javscript for better performance
கோடையை வரவேற்கும் நவீன மண் பானைகள்- Dinamani

சுடச்சுட

    

    கோடையை வரவேற்கும் நவீன மண் பானைகள்

    By நமது நிருபர், திருவள்ளூர்,  |   Published on : 24th March 2018 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tiru

    கோடைக் காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளித்து குளிர்ந்த நீரை பருகும் வகையிலும், பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும் புதிதாக குழாய் பொருத்தப்பட்ட நவீன மண்பானைகள் புதுப்புது ரகங்களில் விற்பனைக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
     மீண்டும் பாரம்பரியம்: தமிழக கிராமங்களில் பொதுமக்களிடையே மண்பானை என்பது இரண்டறக் கலந்த ஒன்றாகும். அவ் வகையில் மண்பானையில் சமைக்கும் சோறும், அப்பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனிச் சுவையுடையது என்பதும் அனைவரும் அறிந்ததாகும். இதன் அடிப்படையிலேயே அந்தக் காலத்தில் வழிப்போக்கர்
     களின் தாகம் தணிக்கும் வகையில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து மண்பானைகளில் குளிர்ந்த தண்ணீரையும் வைத்திருப்பார்கள்.
     அதேபோல், திருவிழாக் காலங்களில் நீர்மோரும், பானகமும் மண்பானைகளில் வைத்து வழங்கப்பட்டன.
     தற்போதைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பானைகள் மற்றும் ஈயப்பாத்திரங்களின் வருகையால் மண்பானைகளின் பயன்பாடு குறைந்தது. தற்போது, இயற்கை விவசாயம், செக்கு எண்ணெய் என மக்கள் உடல் ஆரோக்கியத்துக்கான வழிகளை நாடத் தொடங்கியுள்ளதால், மீண்டும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் மண்பானைகளை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை மனதில் கொண்டு புதுப்புது பானை ரகங்களை உற்பத்தி செய்கின்றனர்.
     குழாய் பொருத்திய நவீன மண்பானை : இவ்வகை பானைகள் திருவள்ளூர், காக்களூர், தாமரைப்பாக்கம், மெய்யூர், ராஜபாளையம், ஈக்காடு, ஈக்காடு கண்டிகை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் வெப்பமும் முன் எப்போதையும் விட அதிகரித்துள்ளது.
     மேலும், கடந்த ஆண்டைவிட , நிகழாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துவருகின்றனர். அதனால் வெயிலை சமாளிக்கும் வகையில், குளிர்ந்த நீரைக் குடித்து தாகத்தை தணித்துக் கொள்ளவே பொதுமக்கள் விரும்புவர். இதற்கேற்ற வகையில் குழாய் பொருத்திய நவீன மண்பானைகள் திருவள்ளூர் வீதிகளில் விற்பனைக்குக் குவிந்துள்ளன.
     பல்வேறு ரகங்களில்: பொதுவாக கோடைக்காலம் தொடங்கியவுடனே மக்கள் மண்பானையை பயன்படுத்தத் தொடங்குவது வழக்கமாகும். இதை கருத்திற்கொண்டு காலமாற்றத்துக்கு ஏற்ப, மண்பானைகளும் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுள்ளன. இதில், குழாய் பொருத்தப்பட்ட மண்பானைகள் பல வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளன. இதனுடன் சேர்த்து சமையல் செய்யும் வகையில் மண்சட்டிகள், உண்டியல், திருஷ்டி பானைகள் என பல்வேறு ரகங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் நவீன மண்பானைகள் குறைந்தபட்சம் ரூ.120 முதல் அதிக பட்சம் ரூ.350 வரையிலும், அதேபோல் சிறிய ரக பானைகள், டம்ளர், ஜக், ஜாடி மற்றும் உண்டியல்கள் போன்றவைகளும் ரூ.40 முதல் ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
     மண்பானை நீரை சுத்திகரிக்கும்... : இது குறித்து திருவள்ளூரை அடுத்த ராஜபாளையம் பிரபு கூறுகையில், கோடைக்காலம் என்பதால் ஏழைகளின் பிரிட்ஜ்-ஆக மண்பானைகளே விளங்குவதால் இயற்கையான முறையில் குளிர்ந்த நீரை பருக முடியும். அதன் அடிப்படையிலேயே வாங்கிச் செல்கிறேன். அதேபோல், மண்பானை ஒரு மிகச்சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவியாகும். பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து 2 முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்தத் தண்ணீரில் உள்ள தீய கிருமிகளை மண்பானை உறிஞ்சி அழித்துவிடும். இயற்கையான நீருடன் மண் சக்தியையும் தருவதால் மனதுக்கு ஒருவிதமான உற்சாகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
     விற்பனை அமோகம் : இது குறித்து மண்பானை வியாபாரி வெங்கடேசன்(45) கூறுகையில், தற்போது கோடைக்காலம் என்பதால் மண்பானைகளையே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவர். இதுபோன்ற காரணங்களால் பொதுமக்கள் விரும்பும் பல்வேறு ரகங்களில் மண்பானைகள் தயார் செய்து வருகிறோம். அதிலும், குழாய் பொருத்தப்பட்ட நவீன மண்பானைகளையே ஆர்வத்துடன் அதிகம் பேர் வாங்கிச் செல்கின்றனர். தற்போதைய நிலையில் பானை செய்வதற்கான மண்வகைகள் கிடைப்பதில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மண்பானைகளை உருவாக்குவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதனால்தான் விலையையும் தரத்திற்கேற்ப உயர்த்த வேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai