Enable Javscript for better performance
சேலத்திலிருந்து சென்னைக்கு நாளை விமான சேவை தொடக்கம்: முதல் விமானத்தில் முதல்வர் வருகிறார்- Dinamani

சுடச்சுட

    

    சேலத்திலிருந்து சென்னைக்கு நாளை விமான சேவை தொடக்கம்: முதல் விமானத்தில் முதல்வர் வருகிறார்

    By  ஓமலூர்  |   Published on : 24th March 2018 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    plane

    8 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் - சென்னை இடையிலான பயணிகள் விமான சேவை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25) மீண்டும் தொடங்க உள்ளது.
     சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டு, சுமார் 163 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. தொழில் நகரமான சேலத்தில் இருந்து வெளியூர், வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பயணிகள், வியாபாரிகளின் வசதிக்காக பெரும் போராட்டத்துக்கு பிறகு அப்போது இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டது. இரு முறை விமான சேவைதொடங்கப்பட்டு போதிய வரவேற்பு இல்லாமையால் நிறுத்தப்பட்டது.
     இதனிடையே, சிறு விமான நிலையங்களில் போக்குவரத்தைச் செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு உதான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட நகரங்களுக்கு விமானப் போக்குவரத்தைத் தொடங்க முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் நஷ்டத்தை மத்திய, மாநில அரசுகள் குறிப்பிட்ட அளவில் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, சேலம் - சென்னைக்கு விமானப் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளது. ட்ரூஜெட் விமான சேவை நிறுவனம் சேலம் - சென்னை விமானப் போக்குவரத்தைத் துவக்குகிறது. தொடக்க விழாவில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு விமான சேவையைத் தொடங்கி வைக்கிறார். மேலும், இந்த விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
     இதற்கான விழா மேடை அமைத்தல் மற்றும் ஏற்பாட்டுப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
     விமான நேரம், பயணிகள் பாதுகாப்பு, விழா மேடை, விழாவில் கலந்துகொள்வோர் மற்றும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
     தொடக்க விழாவையொட்டி, சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் புறப்பட்டு சேலம் வருகிறது. இதில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி , 70 பயணிகளுடன் சேலம் வருகை தருகிறார். பின்னர், 10 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில், சேலத்தில் இருந்து சென்னை செல்லும் முதல் விமான சேவையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.
     விமான சேவை மீண்டும் தொடங்கவுள்ளதையொட்டி, சேலம் விமான நிலையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விமான நிலையத்தில் பயணிகள் கொண்டு வரும் உடைமைகளைச் சோதனை செய்யும் கருவிகள், உடைமைகளை விமானத்துக்கு கொண்டு செல்வதற்கான சிறு தள்ளுவண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனம் ஒன்றும் விமான நிலையத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai