Enable Javscript for better performance
தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம்: ஏப்.30-க்குள் அறிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம்: ஏப்.30-க்குள் அறிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    By மதுரை  |   Published on : 24th March 2018 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண விவரத்தை ஏப்ரல் 30 -ஆம் தேதிக்குள் அறிவிக்கவும், அதன் விவரத்தை அரசின் இணையதளத்தில் வெளியிடவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
    மதுரை கீழவெளிவீதியைச் சேர்ந்த கே.ஹக்கீம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன் விவரம்:
    தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய நீதிபதி எம்.சிங்காரவேலு தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. அக் குழு 2017-2018 கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை அறிவித்தது. அதன் பிறகு 2018 முதல் 2021 வரையிலான கல்வி ஆண்டுகளுக்கான கட்டணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
    தமிழகத்தில் 7 ஆயிரத்து 600 தனியார் மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. பெரும்பாலான பள்ளிகள் மாணவர் சேர்க்கையை இப்போதே தொடங்கிவிட்டன. வரும் கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணம் இன்னும் அறிவிக்கப்படாததால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களிடம் இஷ்டம் போல கட்டணம் வசூலிக்கின்றன.
    வரும் ஜூன் முதல் வாரத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் நிலையில், மாணவர்களும், பெற்றோரும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே 2018 முதல் 2021 வரையிலான ஆண்டுகளுக்கு கல்விக் கட்டணம் அறிவிக்கும் வரை தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை விதிக்க வேண்டும். 2018 முதல் 2021 வரையிலான கல்விக் கட்டணத்தை வெளிப்படையாக அறிவிக்க தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
    இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தமிழகத்தில் 10 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 5 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்து முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று குறிப்பிட்டார்.
    விசாரணை முடிவில், தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்து ஏப்ரல் 30 -ஆம் தேதிக்குள் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai