Enable Javscript for better performance
திசை மாறிப் போனவர்கள் திரும்பி வருவர்: முதல்வர் பேச்சு- Dinamani

சுடச்சுட

  

  திசை மாறிப் போனவர்கள் திரும்பி வருவர்: முதல்வர் பேச்சு

  By  சென்னை,  |   Published on : 24th March 2018 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  JEPS

  மாயையில் திசை மாறிப் போன அதிமுக தொண்டர்கள் தங்கள் தாய் வீட்டை நோக்கி நிச்சயம் திரும்பி வருவார்கள் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
   அரசியல் சூறாவளிக்குத் தாக்குப் பிடிக்காத கட்சிகள் விரைவில் காணாமல் போகும் எனவும் அவர் பேசினார்.
   முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சென்னையில் வெள்ளிக்கிழமை சாதனை விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று முதல்வர் பழனிசாமி பேசினார். முன்னதாக, ஓராண்டு சாதனை தொடர்பான புத்தகங்களும், சட்டப் பேரவையில் அவரது பேச்சுகள் அடங்கிய புத்தகமும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் உள்ளிட்ட நூல்களை முதல்வர் வெளியிட்டார்.
   இந்த நூல்களை விழாவுக்குத் தலைமை வகித்த பேரவைத் தலைவர் பி.தனபால், விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள் பெற்றுக் கொண்டனர். பின்னர், முதல்வர் பழனிசாமி பேசியது:-
   உழைப்புக்கு முன்னுரிமையும் வெகுமதியும் அளிக்கக்கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க.தான் என்பதற்கு இந்தக் கட்சியில் உள்ள நான் உள்பட அனைவரும் உதாரணமாக இருக்கிறோம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பப்படி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை 30 மாவட்டங்களில் கொண்டாடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. மேலும், மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
   தீர்ப்பைச் செயல்படுத்தும்: இந்த ஓராண்டில் நாங்கள் செய்த சாதனைத் திட்டங்களில் குடிமராமத்துத் திட்டத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியது மிகவும் முக்கியமானதாகும். ஏரிகளிலிருந்து அள்ளப்படும் வண்டல் மண்ணானது விவசாயிகளின் விளைநிலங்களுக்கு இயற்கை உரமாக பயன்படுத்தப்படுகிறது.
   மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம், முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டுமென அரசு வலியுறுத்தி வருகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு முழுமையாகச் செயல்படுத்தும் என நம்புகிறோம்.
   கடந்த ஓராண்டில் அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.
   போலி முகம் மக்களுக்குத் தெரியும்: மக்கள் எங்களது பொற்கால ஆட்சியின் வெற்றிப் போக்கை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். எது ஒப்பனை இல்லாத உண்மை முகம். எது அரிதாரம் பூசி நடிக்கிற போலி முகம் என்பது மக்களுக்குத் தெரியும்.
   ஆதாயம் தேடி அரசியலுக்கு வர நினைப்பவர்கள், முள்செடிகளைப் போன்று முளைத்து பிறகு கருகி காணாமல் போவர். சிறிய அரசியல் சூறாவளிக்குக் கூட தாக்குப் பிடிக்காத பல கட்சிகள் விரைவில் காணாமல் போகும். பேசிப் பேசி அவர்கள் நாக்கு வறண்டு தங்களையும் அழித்து அற்ப ஆசையில் தங்களை நம்பி வந்த தொண்டர்களையும் அழித்து விடுவர்.
   அசைக்க முடியாத சக்தி அதிமுக: அதிமுக எனும் இயக்கத்தை வழிநடத்த வழி வழியாக எங்களிடம் வலிமையான தொண்டர்கள் உருவாகிக் கொண்டே இருப்பர். இன்னும் நூறாண்டு காலம் ஆனாலும் யாராலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும். ஏதோ ஒரு மாயையில் திசை மாறிப் போன மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குழந்தைகள் தங்களது தாய் வீட்டை நோக்கி நிச்சயம் வருவார்கள்.
   ஜெயலலிதாவின் கனவு நனவாகும்: ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்குவார்கள். இந்தத் தருணத்தில் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நயவஞ்சகர்களின் சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து பாடுபட வேண்டும் என்று பேசினார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai