Enable Javscript for better performance
பிளஸ் 1 பொதுத் தேர்வில் கருணை மதிப்பெண் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன்- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 1 பொதுத் தேர்வில் கருணை மதிப்பெண் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன்

    By  சென்னை,  |   Published on : 24th March 2018 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ANGAN

    தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பிளஸ் 1 பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் அந்தத் தேர்வுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
     சென்னை மயிலாப்பூர் பஜார் சாலை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், வெ.சரோஜா ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் அங்கன்வாடியில் கற்பிக்கப்படும் முன்பருவக் கல்வி குறித்து ஆய்வு செய்தனர்.
     இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது:- அங்கன்வாடியில் இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுப்பொருள்கள் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டபேரவையில் அறிவித்திருந்தார்.
     பள்ளிப் பருவத்திற்கு முன்பாக அங்கன்வாடி குழந்தைகளுக்கு முறையான ஊட்டச்சத்துக் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருந்தார். இதனடிப்படையில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கும் திட்டத்தை தற்போது தொடங்கிவைத்துள்ளோம்.
     அரசுப் பள்ளிகளிலேயே படிப்பைத் தொடர... இரண்டு முதல் 4 வயதுக்குட்பட்ட ஏழைக் குழந்தைகள் அரசின் அங்கன்வாடி மையத்தில் சேர்க்கப்படுகின்றனர். அந்த வகையில் தமிழகத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் மொத்தம் 13 லட்சம் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு ஐந்து வயதானதும், மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ போன்ற பள்ளிகளில் சேர்த்து அதிக கட்டணம் செலுத்தமுடியாமல் பெற்றோர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அங்கன்வாடி குழந்தைகள் 5 வயதுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளிலேயே படிப்பைத் தொடரும் வகையில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.
     பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக சில மாணவர்களும், எளிமையாக இருப்பதாக சில மாணவர்களும் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து கல்வித் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
     பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது. அகில இந்திய அளவில் பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதை மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர் என்றார்.
     இந்த நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai