Enable Javscript for better performance
மக்களைப் பற்றி கவலைப்படாதவர்கள் "சிஸ்டம்' பற்றிப் பேசுவதா? துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    மக்களைப் பற்றி கவலைப்படாதவர்கள் "சிஸ்டம்' பற்றிப் பேசுவதா? துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

    By  சென்னை,  |   Published on : 24th March 2018 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ops

    மக்களின் கஷ்டத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாதவர்கள் சிஸ்டத்தைப் பற்றிப் பேசுவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்தார்.
     மேலும், அதிமுகவை உயிராக நினைக்கும் தொண்டர்கள் இருக்கும் வரை கட்சியை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என அவர் பேசினார்.
     முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஓராண்டு ஆட்சியின் நிறைவை ஒட்டி, சென்னையில் நடைபெற்ற சாதனை விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். அவர் பேசியது:
     மூன்று அதிர்ச்சிகள்: தமிழகத்தில் நம்மை எதிர்ப்பவர்களுக்கு மூன்று அதிர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடும் உழைப்பால் உருவாக்கிய நல்லாட்சியை, அவரது மறைவுக்குப் பிறகு அவரது தொண்டர்கள் சிந்தாமல், சிதறாமல் கட்டிக் காத்து ஓராண்டைக் கடந்து விட்டார்களே என்பது முதல் அதிர்ச்சியாகும். ஜெயலலிதா வகுத்துத் தந்த திட்டங்களை அனைத்தும் நிறைவேற்றி சாதனைகள் படைத்து வருகிறார்களே என்பது இரண்டாவது அதிர்ச்சியாகும். எதிர்ப்புகளை முறியடித்து துரோகங்களை துவம்சம் செய்து தங்கு தடையின்றி, பொங்கும் வெள்ளம் போன்று, ஐந்து ஆண்டுகளையும் நிச்சயம் நிறைவு செய்து விடுவார்கள் என்பது மூன்றாவது அதிர்ச்சியாகும்.
     நாங்கள் அர்ஜூனர்கள்: துரோணாச்சாரியாரிடம் பாடம் கற்ற அர்ஜூனன் போன்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பாடம் கற்ற அர்ஜூனர்கள் நாங்கள். நல்லவர்களும், வல்லவர்களும் சேர்ந்துதான் வெற்றிகரமாக ஓராண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
     எந்தக் கவலையும் இல்லை: எதிர்க்கட்சியினர் என்ன விமர்சனம் செய்தாலும், நாங்கள் கவலைப்படவும் இல்லை. கலங்கவும் இல்லை. எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படுவதும், கலங்கி நிற்பதும் எதிர்க்கட்சியினர்தான்.
     பறக்கும் கழுகுகள்: எங்களது நாடி நரம்புகளில் கலந்து விட்ட இயக்கத்தை கபளீகரம் செய்வதற்கு சில கழுகுகள் பறந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கழுகை வேட்டையாடுவதற்கு தொண்டர்கள் வீரமிக்க வேடன்களாக வீறு கொண்டு நின்று கொண்டிருக்கிறோம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை உயிராக நினைக்கும் விசுவாசத் தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது.
     "சிஸ்டம்' பற்றிப் பேச்சு: இப்போது புதிது புதிதாக சிலர் வந்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் கஷ்டத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாதவர்கள் "சிஸ்டத்தை' பற்றிப் பேசுகிறார்கள். சிலர் கருத்துகளை மட்டுமே சொல்லும் கந்தசாமியாக மாறி விட்டார்கள்.
     பூஜ்யம்தான் கிடைக்கும்: அரசியலைப் பற்றியே தெரியாமல், அரசியல் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு மக்கள் போடப் போவது பூஜ்யம்தான். ஜெயலலிதா ஆண்ட தமிழகத்தை அவரது விசுவாசத் தொண்டர்கள்தான் ஆள வேண்டும் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்த ஆட்சி நிலைக்காது, நீடிக்காது என்று பரபரப்பாகப் பேசியவர்களும், அடுக்கடுக்காக அறிக்கைகள் விட்டவர்களும் ஆரூடம் கூறியவர்களும், ஆடி அடங்கிப் போய் விட்டார்கள்.
     கனவில்கூட நடக்காது: பூனைகள் கூடி யானையை அசைத்துப் பார்த்து விடலாம் என நினைக்கிறார்கள். அது கனவில் கூட நடக்காது. இந்த ஆட்சிக்கு ஊறு செய்திடலாம் என்று நினைப்பவர்களை ஒரு நாளும் நாங்கள் விட மாட்டோம் என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai