Enable Javscript for better performance
அரசியல் எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம்: டிடிவி அணியினருக்கு ஓபிஎஸ் அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரசியல் எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம்: டிடிவி அணியினருக்கு ஓபிஎஸ் அழைப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    OPS3

    அரசியலில் எதிர்காலத்தை வீணடித்துவிடாதீர்கள் எனக் கூறி, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) அமைப்பினருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
    இதுதொடர்பாக, மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 120 ஜோடிகள் இலவச திருமண விழாவில் அவர் பேசியது:
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. இந்த ஆட்சியைக் கவிழ்க்க நினைப்பதும், மக்களின் மகிழ்ச்சியைக் கெடுக்க நினைப்பதும் ஒன்றுதான். அதிமுக தொண்டர்களை ஏமாற்ற சிலர் வஞ்சக வலையை வீசிக் கொண்டிருக்கின்றனர்.
    இதைக் குறிப்பிடும்போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு காட்டில் ஒற்றுமையாக இருந்த புறாக்களை பிடிக்கத் திட்டமிட்ட வேடர்கள், வலையை விரித்தனர். வலைக்குள் தானியங்களைப் போட்டு வைத்தனர். இதை உணராத சில புறாக்கள் தானியங்களை எடுக்கச் சென்றபோது, வலைக்குள் சிக்கிக் கொண்டன. சில அனுபவம் மிக்க புறாக்கள் அந்த வேடர்களின் சூழ்ச்சியைக் கூறி எச்சரித்தன. இதில் பல புறாக்கள் வலைக்குள் செல்லாமல் தப்பின.
    சில புறாக்கள் மட்டும் புத்திமதியைக் கேட்காமல் உணவு கிடைக்கிறதே எனத் தேடிப்போய் வலையில் மாட்டி தவித்துக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த அனுபவமிக்க புறாக்கள், உங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு வழி இருக்கிறது. வேடர்கள் வரும் முன்பு ஒன்றாகச் சேர்ந்த வலையோடு பறந்து போய்விடுங்கள். வேடர்களிடம் இருந்து உங்களை நாங்கள் காப்பாற்றுகிறோம் என்றன.
    அதைப்போல, தமிழக அரசியலில் சில வேடர்கள் விரித்த வலையில் சிக்கியவர்கள் அரசியலில் தங்களது எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம். மீண்டும் வாருங்கள்; நாம் ஒன்றிணைந்து தமிழக மக்களுக்கு நிலையான மகிழ்ச்சியைக் கொடுப்போம் என்றார் துணை முதல்வர். 
    இந்த கதையின் மூலமாக அமமுக -வின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனின் அணியில் உள்ளவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்.
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தது. அப்போது மதுரையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்ற அரசு விழாவில், இதே புறா -வேடன் கதையைக் கூறி ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவர் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai