Enable Javscript for better performance
'எலக்ட்ரிக்' கார், ஸ்கூட்டர்களுக்கு இஸ்ரோ பேட்டரி- Dinamani

சுடச்சுட

    
    sivan

    ராக்கெட்டுகளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பயன்படுத்தி வரும் லித்தியம் பேட்டரி, விரைவில் கார்களிலும், ஸ்கூட்டர்களிலும் பயன்படுத்தப்பட உள்ளன. 
    இதற்கான திட்டங்களை இஸ்ரோவும், மத்திய அரசும் மேற்கொண்டு வருகின்றன.
    இஸ்ரோ அண்மைக் காலமாக செயற்கைக்கோள்களை விண்ணுக்கு தாங்கிச் செல்லும் ராக்கெட்டுகளில் லித்தியம் பேட்டரிகளைப் பயன்படுத்தி வருகிறது. இந்த உயர்ந்த திறன் கொண்ட மறு பயன்பாட்டுக்கு (ரி-சார்ஜபிள்) பேட்டரி, முழுவதும் இஸ்ரோ விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டது. இது விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகளின் செயல்பாட்டை மேலும் கூடுதலாக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
    கடந்த வியாழக்கிழமை ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.-எப்.08 ராக்கெட்டிலும் இந்த பேட்டரி பயன்படுத்தப்பட்டது. இந்தத் தொழில்நுட்பத்தை, நீதி ஆயோக் திட்டத்தின் கீழ் கார், ஸ்கூட்டர் போன்ற 'எலக்ட்ரிக்' வாகனஙகளில் (இ-வாகனம்) பயன்படுத்த, மத்திய அரசும், இஸ்ரோவும் முடிவு செய்துள்ளன.
    இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் 'தினமணி'-க்கு அளித்த பேட்டி: இஸ்ரோ சார்பில் இந்த லித்தியம் பேட்டரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பேட்டரி தொழில்நுட்பத்தை, எலக்ட்ரிக் வாகனத் துறையில் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
    இதற்காக நீதி ஆயோக் திட்டத்துடன் இணைந்து இஸ்ரோ தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.
    ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் உயர் திறன் கொண்டவை. எனவே, இந்த பேட்டரியை கார், ஸ்கூட்டர் போன்ற 'எலக்ட்ரிக்' வாகனங்களில் பயன்படுத்தும் வகையில், அதன் திறனைக் குறைக்க தொழில்நுட்பத்தில் சிறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தை வணிக ரீதியில், எந்தவொரு உற்பத்தி நிறுவனத்துக்கும் பரிமாற்றம் செய்ய இஸ்ரோ தயாராக உள்ளது. குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு என்று அல்லாமல், உற்பத்தி செய்ய முன்வரும் எந்தவொரு நிறுவனத்துக்கும் இந்தத் தொழில்நுட்பத்தை தர இஸ்ரோ தயாராக உள்ளது.
    இவ்வாறு உள்நாட்டிலேயே இந்த பேட்டரிகள் உற்பத்தி செய்யப்படும்போது, மிகக் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் லித்தியம் பேட்டரிகளைக் காட்டிலும், பன்மடங்கு குறைந்த விலையில் கிடைக்கும் நிலை உருவாகும் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai