Enable Javscript for better performance
ஒன்றுபட்டு போராட வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    
    pandian

    காவிரி மேலாண்மை வாரியத்துக்காகத் தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தினர். 
    தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசனின் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு: தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது. எனவே, அனைத்துக் கட்சியினரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தா. பாண்டியன்: உச்ச நீதிமன்றமே தானாக முன் வந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். முதல்வரின் உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பு வரவேற்கதக்கது. காவிரி விவாகாரத்தை பொருத்தவரை அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்.
    திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி: காவிரி விவகாரத்தை பொருத்தவரை ஒருமித்த உணர்வும், கருத்தும், போராட்டமும் தேவை. ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தினால்தான் வெற்றி பெறமுடியும். முதல்வரின் உண்ணாவிரத போராட்டம் ஏமாற்றும் வேலை.
    மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மாநில அரசுத் தொடர வேண்டும். 
    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்: காவிரி மேலா ண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் காலம் தாழ்த்துவது என்பது தமிழகத்துக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகம். அதிமுக அறிவித்திருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை வரவேற்கிறோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தமிழக அரசுத் தொடுக்க இருப்பதும் வரவேற்கத்தக்கது. திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாங்கள் பங்கேற்போம்.
    நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: அதிமுக அறிவித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் ஒரு நாடகம். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் எந்தப் பயனும் இருக்காது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது. பாஜக மட்டுமல்லாமல் காங்கிரசும் தமிழ்ச் சமுதாயத்தை மதிக்காது. கர்நாடக மாநிலத் தேர்தலை குறி வைத்துதான் இரு கட்சிகளும் செயல்படுகின்றன.
    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலர் தமீமுன்அன்சாரி: காவிரி மேலா ண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் தமிழகத்துக்குப் பச்சைத் துரோகம் செய்துவிட்டது. தமிழக விவசாயிகளை ஏமாற்றிவிட்டது. மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் தாமாகவே முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டும். அதேபோல, நீதிமன்றமே தாமாக முன் வந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளும் இணைந்து பொது போராட்டமாக நடத்த வேண்டும். அதுதான் தமிழகத்தின் குரலாக இருக்கும்.
    தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் பெ. ஜான்பாண்டியன்: தமிழக முதல்வர் பழனிச்சாமி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருப்பது ஒரு ஏமாற்று வேலை. இது ஒரு நாடகம். மத்திய அரசு மட்டுமல்லாமல், மாநில அரசும் தமிழக விவசாயிகளை ஏமாற்றுகிறது. அனைவரும் அரசியல் பாகுபாடு இன்றி போராட வேண்டும். அப்போதுதான் காவிரி பிரச்னையில் நாம் வெற்றி பெற முடியும்.
    காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன்: முதல்வரின் உண்ணாவிரத போராட்ட அறிவிப்பு கண்துடைப்பு வேலை. தமிழக அரசு அனைத்துக் கட்சிகளையும் அழைத்து பேசி மத்திய அரசு அலுவலகங்களை முடக்கும் போராட்டத்தை அறிவிக்க வேண்டும்.
    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன்: அதிமுகவின் உண்ணாவிரத போராட்டம் ஏமாற்று வேலை. அனைத்து கட்சிகளையும் அழைத்து போராட்டம் நடத்த வேண்டும். பிரதமர் மீது அவமதிப்பு வழக்கை தொடர வேண்டும். அனைத்து கட்சிகளையும் திமுக அழைத்து இருப்பது வரவேற்கத்தக்கது.
    தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு தாமதிக்கிறது. கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பாஜக, காங்கிரஸ் கட்சிகள், தமிழக மக்களின் நலனைப் புறக்கணித்துவிட்டன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் தமிழக மக்கள் உரிய நேரத்தில் பாடம் புகட்டுவார்கள். 
    காவிரி பிரச்னையை மாநிலப் பிரச்னையாகப் பார்க்காமல், தேசிய அளவிலான விவசாயிகளின் பிரச்னையாகக் கருதி நிரந்தரத் தீர்வு காண வேண்டும். தமிழகத்துக்கு காவிரி நீரைத் தரக் கூடாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. டெல்டா விவசாயிகள் ஒருபோக சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: தமிழகத்தின் வாழ்வாதாரங்களை அழித்து, பேரழிவை நோக்கித் தள்ளி வரும் மத்திய அரசுக்கு அதிமுக அரசு இணங்கி நடப்பதால், தமிழகத்துக்கு தொடர்ந்து மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது. காவிரியில் தமிழகத்தின் மரபு உரிமையை நிலைநாட்ட தமிழகமே திரண்டு போராட்டக் களத்தை அமைப்பது மட்டுமே மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணியாக அமையும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai