Enable Javscript for better performance
காவிரி: மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு இன்று மனு தாக்கல்?- Dinamani

சுடச்சுட

    

    காவிரி: மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு இன்று மனு தாக்கல்?

    By DIN  |   Published on : 31st March 2018 04:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme court

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு நிறைவடைந்துள்ள சூழலில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சனிக்கிழமை காலை தாக்கல் செய்ய உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் வியாழக்கிழமை நிறைவடைந்து விட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அடுத்த கட்ட நகர்வு, நிலைப்பாடு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 
    இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மனு கடந்த சில நாள்களாக தயாரிக்கப்பட்டு வந்தது. அந்த மனு வெள்ளிக்கிழமை இறுதி வடிவம் பெற்றுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
    தமிழக பொதுப் பணித் துறைச் செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை இரவு தில்லி வந்துள்ளனர்.


    இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மதுரையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னை தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். எனினும் இது தொடர்பான மேல் விவரங்களைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
    அவர் மேலும் கூறியது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் காவிரிப் பிரச்னைக்கு சரியான தீர்வு. ஆனால் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில் நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. 
    மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு அனைத்து வகையிலும் நாங்கள் ஒத்துழைப்புக் கொடுத்து வந்த போதிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
    எனவேதான், நாடாளுமன்றக் கூட்டம் ஆரம்பித்த நாள் முதல் முடியும் வரை தொடர்ந்து 17 நாள்கள் தமிழகத்தின் குரலையும், டெல்டா விவசாயிகளின் கோரிக்கையையும் எதிரொலிக்கும் விதமாக உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். ஒரு மாநிலத்தின் பிரச்னைக்காக 17 நாள்கள் நாடாளுமன்றம் முடங்கியது இதுவே முதல்முறை. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது. 
    உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில், அதிமுக அரசு உணர்வுப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது. அதன்படிதான் ஏப்ரல் 3-ஆம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் துணை முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வை இப் போராட்டத்தின் மூலமாக வெளிப்படுத்துவோம் என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. 
    இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. ஏப். 11-இல் சென்னை வரவிருக்கும் பிரதமர் மோடியைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெறும் என்று கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (ஏப். 1) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai