Enable Javscript for better performance
கோரிக்கைகள் நிறைவேறும் வரை புதிய திரைப்படங்கள் வெளியாகாது- Dinamani

சுடச்சுட

    

    கோரிக்கைகள் நிறைவேறும் வரை புதிய திரைப்படங்கள் வெளியாகாது

    By DIN  |   Published on : 31st March 2018 10:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vishal

    திரைத் துறையைச் சீரமைக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேறும் வரை புதிய படங்களின் வெளியீடு இருக்காது என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார். 
    திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மார்ச் 1 -ஆம் தேதி முதல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. திரையரங்குகள் மட்டுமே இயங்கி வரும் நிலையில், ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த வேலைநிறுத்தத்தால் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். சுமார் 300 கோடி ரூபாய்க்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 
    இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
    டிஜிட்டல் முறையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தைக் குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளாத டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு எதிராக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் திரையரங்குகளில் வசூலிக்கப்படும் கட்டணம் உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கைகளும் இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. 
    சீரமைக்கும் போராட்டம்: இது வேலை நிறுத்தம் என்பதைவிட, தமிழ் சினிமாவை சீரமைக்கும் பணியாகவே கருதுகிறோம். குறிப்பாக திரையரங்குகள் எங்களது கோரிக்கைகளை ஏற்கவில்லை. புரொஜக்டர்கள் இல்லாமல் திரையரங்குகள் இருக்கக்கூடாது என்று சொல்கிறோம். அதை திரையரங்க உரிமையாளர்கள் ஏற்க வேண்டும். ஆன் லைன் டிக்கெட் விற்பனையில் கூடுதலாக ரூ. 30 வசூலிக்கப்படுகிறது. இது யாருக்கான லாபம் என்று தெரியவில்லை. இது மக்களுக்கு பெரிய பாரமாக இருக்கிறது. சினிமா சாராத வெளி நிறுவனம் இங்கே கோடி கோடியாகச் சம்பாதிக்கிறது. ஆனால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற பல பிரச்னைகள் உள்ளன. திரையரங்க உரிமையாளர்கள் எங்களது கோரிக்கையை ஏற்கும் வரை புதிய படங்கள் வெளியாகாது. 
    அரசு தலையிட வேண்டும்: இந்தப் பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டுத் தீர்வு காண வேண்டும். இதை வலியுறுத்தி தமிழக முதல்வர், செய்தித் துறை அமைச்சர் ஆகியோருக்கு நேரடியாக கோரிக்கைகளை வைக்க உள்ளோம். 
    ஏப்ரல் 4 -இல் பேரணி: கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், வரும் வாரத்தில் தமிழ்த் திரை அமைப்புகள் ஒன்று சேர்ந்து பிரம்மாண்ட பேரணியை புதன்கிழமை (ஏப்.4)நடத்த இருக்கிறோம். அதன்பின் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுக்க உள்ளோம் என்றார் விஷால். 
    ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai