Enable Javscript for better performance
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கு: சமரசம் செய்ய இருதரப்பினரும் முடிவு: தீர்ப்பு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கு: சமரசம் செய்ய இருதரப்பினரும் முடிவு: தீர்ப்பு ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    high_court1

    சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே கடந்த 2008-இல் நடந்த மோதல் தொடர்பான வழக்கில், இரு தரப்பும் சமரசம் செய்ய அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    கடந்த 2008 நவம்பர் 12-ஆம் தேதி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் தேர்வு நேரத்தின்போது இரு தரப்பு மாணவர்கள் மோதிக்கொண்டனர். ஒரு நிகழ்ச்சிக்கு ஒட்டப்பட்ட சுவரொட்டியில் கல்லூரியின் பெயரில் அம்பேத்கர் பெயர் மறைக்கப்பட்டது தொடர்பாக இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
    இந்த மோதலில் பாரதிகண்ணன், சித்திரைச் செல்வன் உள்ளிட்ட 4 பேர் பலத்த காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாரதிகண்ணன், சித்திரைச் செல்வன், ஆறுமுகம் உள்ளிட்ட 43 பேர் மீது கொலை மிரட்டல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
    இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்நிலையில், பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த உண்மை கண்டறியும் குழுவும் விசாரணையை மேற்கொண்டன.
    21 பேருக்கு தண்டனை, 22 பேர் விடுவிப்பு: இந்த வழக்கு 17-ஆவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2016 ஜனவரி 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. தீர்ப்பில், பாரதிகண்ணன், சித்திரைச் செல்வன் உள்ளிட்ட 21 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது; 22 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
    இந்த நிலையில், சிறை தண்டனை பெற்ற 21 பேரில் பெரும்பாலானவர்கள் சட்டப் படிப்பை முடித்து வழக்குரைஞராக தொழில் செய்ய பார்கவுன்சிலில் பதிவு செய்தனர். குற்ற வழக்கில் அவர்கள் தண்டனை பெற்றதால் அவர்கள் வழக்குரைஞர்களாக தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு பார்கவுன்சில் உத்தரவிட்டது.
    சமரசம் செய்து கொள்ள முடிவு: இந்த வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து 21 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
    அப்போது, இருதரப்பைச் சேர்ந்தவர்களும் தாங்கள் சமரசம் செய்து கொள்ளவிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து, இருதரப்பு வழக்குரைஞர்களிடமும் நீதிபதி, 'மேல்முறையீடு செய்துள்ள ஒவ்வொருவரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்யுங்கள். நீதிமன்றம் உரிய உத்தரவைப் பிறப்பிக்கும்' என்று கூறினார்.இதையடுத்து வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார். இதுபோன்ற பிரபலமான குற்ற வழக்கில் இரு தரப்பும் சமரசம் செய்து கொள்ள வந்திருப்பது நீதித் துறை வட்டாரங்களில் ஒரு புதிய அணுகுமுறை என்று கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai