Enable Javscript for better performance
பட்டாசு ஆலையில் தீ விபத்து: 2 தொழிலாளர்கள் சாவு- Dinamani

சுடச்சுட

    
    fire

    விருதுநகரை அடுத்த ஓ. கோவில்பட்டியில் பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தரைமட்டமான அறை, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.

    விருதுநகர் அருகே உள்ள ஓ. கோவில்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல், மாயமான ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
    ஓ. கோவில்பட்டியில், ஓய்வுபெற்ற காவலர் முருகேசனுக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலரிடம் உரிமம் பெற்ற இந்த ஆலையில் ஏழு அறைகள் உள்ளன. இங்கு, சரவெடி, சக்கரம், அனுகுண்டு முதலான வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த ஆலையில் பேன்சி ரக வெடி தயாரிப்பதற்காக சென்னையில் உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர்.
    தினமும் இந்த ஆலையில் சுமார் 30 தொழிலாளர்கள் சரவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கமாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8.20 மணிக்கு சர வெடி தயாரிப்பதற்கான மணி மருந்து கலவை தயாரிக்கும் பணியில் மூன்று தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது மணி மருந்து உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு கட்டடத்தில் உள்ள மூன்று அறைகள் வெடித்து சிதறின. இதன் காரணமாக பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் முத்துலாபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் முருகன்(42), பள்ளபட்டி சுப்புக்காளை மகன் சந்திரன் (30) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    மேலும், இதில் 80 சதவீதம் பலத்த காயமடைந்த இ. குமாரலிங்காபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் இருளப்பன் (38), சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர், சிவகாசி தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
    ஒருவர் மாயம்: கற்கள் வெடித்து சிதறியதில் ஆலை அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. இந்நிலையில், பட்டாசு ஆலையில் பணி புரிந்த உப்போடையைச் சேர்ந்த பாலமுருகனை (26) காணாததால், அவர் விபத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என கருதி, பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளை போலீஸார் அகற்றினர். 
    ஆனால், அவரது உடல் கிடைக்கவில்லை. ஏற்கெனவே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல் சிதறியதால் பாலமுருகனை அடையாளம் காண முடியவில்லை. இதனால், மாயமான அவரை போலீஸார் தேடி வருகின்றனர். விபத்து நடந்த பட்டாசு ஆலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதுதொடர்பாக ஆமத்தூர் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai