Enable Javscript for better performance
மாவட்டத் தலைநகரங்களில் ஏப்.3-இல் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    
    ops

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சார்பில் ஏப்ரல் 3-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
    மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 120 ஏழை ஜோடிகளுக்கான திருமண விழாவில் அவர் மேலும் பேசியது:
    காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் மேற்பார்வைக் குழுவை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த அவகாசம் வியாழக்கிழமையுடன் முடிவடைந்துள்ளது. மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது, தமிழக அரசு அடுத்த என்ன செய்யப் போகிறது என தமிழக மக்கள் குறிப்பாக விவசாயிகள் எதிர்பார்த்து இருக்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் தான் தமிழக அரசு செயல்படும்.
    தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் பறிபோய்விடாத அளவுக்கு எங்களது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதற்கு அடையாளமாக அதிமுகவின் சார்பில் ஏப்ரல் 3-இல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் உண்ணாவிரதம் நடைபெறும். இப் போராட்டம் தேசிய அளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தையும் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க இந்த உண்ணாவிரதத்தின் வாயிலாக வலியுறுத்தப்படும். 
    உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி சட்டம் -ஒழுங்கு பிரச்னைகள் ஏதும் இல்லாத வகையில் அறவழியில் இப் போராட்டம் நடைபெறும். விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இதில் பங்கேற்று போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai