Enable Javscript for better performance
ரயில் பாதையில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்தது: 8 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    ரயில் பாதையில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்தது: 8 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் 

    By DIN  |   Published on : 31st March 2018 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rail

    ஜோலார்பேட்டை அருகே ரயில் பாதையில் அறுந்து விழுந்து கிடந்த அழுத்த மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள்.

    வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை, ரயில் பாதையில் 25 ஆயிரம் கிலோ வாட்ஸ் திறன் கொண்ட உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் 8 ரயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    சென்னையில் இருந்து மதுரைக்கு விரைவு ரயில் ஒன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அரக்கோணம் மார்க்கமாகச் சென்று கொண்டிருந்தது. ஜோலார்பேட்டையை அடுத்த மொளகரம்பட்டி ரயில் நிலையம் அருகே எதிர் திசையில் சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை வழியாகச் சென்னை செல்லும் ரயில் பாதையில் உயர் மின்னழுத்த கம்பி ஒன்று அறுந்து கிடந்தது. 
    இதனைக் கவனித்த ரயில் என்ஜின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி, இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கும் தகவல் அளித்தார். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் உடனடியாக ரயில் பாதைக்குச் செல்லும் மின்சாரத்தைத் துண்டித்தனர்.
    மேலும், சேலம் மற்றும் ஜோலார்பேட்டை ரயில் நிலைய விபத்து மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து, அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பியைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சேலத்தில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம்-சென்னை மெயில் காக்கங்கரையிலும், மங்களூரு-சென்னை விரைவு ரயில் சாமல்பட்டியிலும், எர்ணாகுளம்-சென்னை சிறப்பு ரயில் தொட்டம்பட்டியிலும், கொச்சுவேலி-பெங்களூரு விரைவு ரயில் மொரப்பூரிலும், திருவனந்தபுரம்-சாலிமர் விரைவு ரயில் லோகூரிலும், திருவனந்தபுரம்-சென்னை விரைவு ரயில் கருப்பூரிலும், எர்ணாகுளம்-ஹைதராபாத் சிறப்பு ரயில் பொம்மிடியிலும் நிறுத்தி வைக்கப்பட்டன. 
    இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
    பெரும் விபத்து தவிர்ப்பு: மின் கம்பியைச் சீரமைத்ததும், 5 மணி நேர தாமதத்துக்குப் பின்னர், ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டன. ஆனால் மற்றொரு பாதையான சென்னை - சேலம் ரயில் பாதையில் எவ்வித பாதிப்பும் இல்லை.
    இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 25 ஆயிரம் கிலோ வாட்ஸ் திறன் கொண்ட உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்துள்ளது. கேட்டனரி வயர் எனப்படும் வயர் 2 இடங்களில் துண்டாகியுள்ளது. இது எவ்வாறு அறுந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில் என்ஜின் ஓட்டுநர் தக்க சமயத்தில் பார்த்து தகவல் தெரிவித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai