எத்தனால் மீதான வரி குறைப்புக்கு தமிழகம் எதிர்ப்பு

எத்தனால் மீதான வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்க தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதேசமயம், உரிய சட்டப் பாதுகாப்பு அளிக்கும் பட்சத்தில்

எத்தனால் மீதான வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்க தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதேசமயம், உரிய சட்டப் பாதுகாப்பு அளிக்கும் பட்சத்தில் இக்குறைப்புக்கு ஆட்சேபணை இல்லை எனவும் மாநில அரசு கூறியுள்ளது.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 27-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காணொலிக் கலந்துரையாடல் மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் சென்னையில் இருந்தபடியே, அமைச்சர் டி.ஜெயக்குமார், அரசுத் துறை செயலாளர்கள் பங்கேற்றனர். இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
நிகழ் நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதே காலகட்டத்தில் தமிழகத்தின் மாநில ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.2 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ஏப்ரல் மாதத்துக்கான வருவாயுடன் ஒப்பிடும் போது 21 சதவீதம் கூடுதல் வருவாய் வளர்ச்சியாகும்.
சர்க்கரை மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரிக்குக் கூடுதலாக கிலோவுக்கு ரூ.3-க்கு மிகாமல் மேல்வரி விதிப்பதற்கான மத்திய அரசின் திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த மேல் வரி விதிக்கும் முறையானது ஜி.எஸ்.டி. சட்டத்தின் கொள்கைக்கு மாறாக உள்ளதால் தமிழகத்துக்கு ஏற்புடையதாக இல்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூட்டத்தில் ஆட்சேபணை தெரிவித்தார்.
எத்தனால் மீதான வரி: எத்தனால் மீதான வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைப்பதற்கான ஆலோசனையும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எத்தனால் பெரும்பாலும் மனித நுகர்வுக்கான மதுபானங்கள் தயாரிப்பதற்கே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. வரியை குறைப்பதால் மாநில அரசின் வருவாய் பாதிக்கக் கூடும் என்பதால் இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.
எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எத்தனால் மீதான வரியை மட்டும் குறைப்பதற்கு மத்திய அரசால் மாற்று ஆலோசனை முன்வைக்கப்பட்டது. உரிய சட்டப் பாதுகாப்பு அளிக்கும்பட்சத்தில் இந்த மாற்று ஆலோசனையை ஏற்பதில் ஆட்சேபணை ஏதுமில்லை என்று தமிழக அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு பொருள்கள்: வணிக முத்திரை இடப்பட்ட மற்றும் முத்திரை இடப்படாத உணவு வகைகள், வணிகச் சின்னமிடப்படாத பேக்கரிப் பொருள்கள், பிஸ்கட்டுகள், தீப்பெட்டிகள், ஊறுகாய், ஜவ்வரிசி, பம்பு செட்டுகள், முறுக்கு வகைகள், வத்தல், ரஸ்க், சின்னம் இடப்படாத பானங்கள், நன்னாரி சர்பத், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், சுக்கு, மிளகு, மஞ்சள், மிளகாய், கடுகு கொண்டு தயாரிக்கப்படும் மசாலா பொருள்கள், சிகைக்காய், டைரி, கடித உறைகள், வேப்ப உரம், அரிசி தவிடு, சானிட்டரி நாப்கின்கள், வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞாண் கயிறு, தாலி, வெளிப்புற உணவு விநியோக சேவை, மெல்லும் புகையிலை, சிட்பண்ட் தொடர்பான சேவைகள், உணவகங்களுக்கான இணக்கமுறை வரிவிதிப்பு, கழிவு செய்யப்பட்ட டயர்கள் ஆகியவற்றின் மீது விரைந்து முடிவு எடுக்கும்படி இந்தக் கூட்டத்தில் மத்திய அரசை அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com