மயிலாடுதுறை அருகே திடீரென உள்வாங்கிய அடுக்கு மாடிக் கட்டடம்: அலறியடித்து வெளியேறிய குடியிருப்பு மக்கள்

மயிலாடுதுறை அருகேயுள்ள அகரகீரங்குடி 3 அடுக்குமாடிக் கட்டடம் வியாழக்கிழமை இரவு திடீரென உள்வாங்கியதால் குடியிருப்பு மக்கள் அலறியடித்து வெளியேறினர்.
மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடியில் உள்வாங்கிய அடுக்கு மாடிக் கட்டடம்.
மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடியில் உள்வாங்கிய அடுக்கு மாடிக் கட்டடம்.

மயிலாடுதுறை அருகேயுள்ள அகரகீரங்குடி 3 அடுக்குமாடிக் கட்டடம் வியாழக்கிழமை இரவு திடீரென உள்வாங்கியதால் குடியிருப்பு மக்கள் அலறியடித்து வெளியேறினர். இதையடுத்து அந்த அடுக்குமாடிக் கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 
நாகை மாவட்டம், குத்தாலம் எலந்தங்குடியைச் சேர்ந்தவர் ஹாஜிமுகம்மது மனைவி நஜிமுன்னிசா. இவருக்குச் சொந்தமான 3 அடுக்கு மாடிக் கட்டடம் மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி கிராமத்தில் உள்ள நகர் விஸ்தரிப்பில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள இக்கட்டடத்தில் 5 குடியிருப்பு வீடுகளும், 1 மரப்பட்டறையும் இருந்து வந்தது. 
இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு சுமார் 12 மணியளவில் பெரும் சப்தத்துடன் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதுடன் கட்டடமும் சிறிது உள்வாங்கியது. இதையடுத்து, அக்கட்டடத்தில் வாடகைக்கு குடியிருந்த 5 குடும்பத்தினர் அலறியடித்துக்கொண்டு, குடியிருப்புகளை விட்டு வெளியேறினார். நள்ளிரவில் ஏற்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையறிந்த, மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உள் வாங்கிய கட்டடத்தைப் பார்வையிட்டனர். மேலும், பொதுமக்கள் ஒத்துழைப்புடன், 5 வீடுகளிலும் வைக்கப்பட்டிருந்த குடியிருப்பு மக்களின் உடைமைகளை மீட்டு, அவரவர்களிடம் ஒப்படைத்தனர். மயிலாடுதுறை டிஎஸ்பி வெங்கடேசனின் நடவடிக்கையின்பேரில், போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அடுக்குமாடி கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் உள்வாங்கிய கட்டடத்தைப் பார்வையிட்டு, குடியிருப்பு மக்களுக்கு ஆறுதல் கூறினார். 
கட்டடம் உள்வாங்கியதற்கான காரணம்: கட்டுமானப் பணி தரமின்மை மற்றும் மயிலாடுதுறை - திருவாரூர் செல்லும், சாலையோரத்தில் இக்கட்டடம் இருப்பதால், கனரக வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வின் காரணமாகவும், இக்கட்டடம் உள்வாங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வட்டாட்சியர் து. விஜயராகவன் கூறியது: உள்வாங்கியக் கட்டடத்தில் குடியிருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மாற்று குடியிருப்புகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கட்டுமானப் பணிகளின் குறைபாடுகளால் கட்டடம் உள்வாங்கியிருப்பது தெரியவந்துள்ளதால், கட்டடத்தின் உறுதித்தன்மைக் குறித்து கட்டுமானப் பொறியாளரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கிடைத்தவுடன் கட்டடத்தை இடித்து அகற்றுவதா அல்லது புனரமைப்பு செய்வதா என தெரிவிக்கப்படும். பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல முடியாதபடி, கட்டடத்தைச் சுற்றிப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com