Enable Javscript for better performance
ஆளுநர் பன்வாரிலால் இன்று விழுப்புரத்தில் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    
    road

    விழுப்புரத்துக்கு வரும் ஆளுநருக்காக சுத்தம் செய்யப்படும் சுற்றுலா மாளிகை. 

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மே 18) ஆய்வு மேற்கொள்கிறார்.
    தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோஹித் வெளி மாவட்டங்களுக்கு அவ்வப்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு தூய்மை இந்தியா திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். தவிர, துறை ரீதியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அனைத்துத் தரப்பினரிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்று வருகிறார். 
    இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக, காலை சென்னையிலிருந்து காரில் வரும் அவர், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டப் பணிகளை தொடக்கி வைத்துப் பார்வையிடுகிறார். அங்கிருந்து, அருகேயுள்ள ஆரோவில் சர்வதேச நகரில் அமைந்துள்ள மாத்திரி மந்திர் தியான மையத்துக்கு செல்கிறார். பகல் ஒரு மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வருகிறார். அங்கு மதிய உணவுக்குப் பிறகு, அனைத்து அரசுத் துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, மாவட்டத்தின் நிலவரங்கள் குறித்து கேட்டறிகிறார். 
    தொடர்ந்து, பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார். அங்குள்ள அரசுத் துறையினரின் புகைப்பட கண்காட்சியையும் அவர் பார்வையிடுகிறார். 
    இதையடுத்து, மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் தூய்மைப் பணியை தொடக்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.
    ஆளுநர் வருகையையொட்டி, விழுப்புரம் சுற்றுலா மாளிகை வளாகம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai