Enable Javscript for better performance
கோவைக்கு அதிக விமானங்கள் வந்து செல்ல சலுகை: தமிழக முதல்வர் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவைக்கு அதிக விமானங்கள் வந்து செல்ல சலுகை: தமிழக முதல்வர் அறிவிப்பு

    By DIN  |   Published on : 18th May 2018 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    eps

    கோவையில் காவல் அருங்காட்சியகத்தை வியாழக்கிழமை திறந்துவைத்து அங்கு வைக்கப்பட்டுள்ள பீரங்கியைப் பார்வையிடுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் இரவு தங்கிச் செல்லும் விமானங்களுக்கு அரசு சார்பில் எரிபொருள் சலுகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    இதனால் கோவைக்கு அதிக அளவிலான விமானங்கள் வந்து செல்லும் என்றும் அவர் கூறினார். 
    கோவை ரயில் நிலையம் அருகே பழைமையான ஹாமில்டன் கிளப்பை புதுப்பித்து காவல் அருங்காட்சியகமாக மாற்ற மாநகர காவல் துறையினர் திட்டமிட்டனர். இதன்படி 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, காவல் அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை திறந்துவைத்தார். பின்னர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களைப் பார்வையிட்டார். 
    பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது:
    வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அருங்காட்சியகத்தில் அந்தக் காலத்தில் இருந்து தற்போது வரை காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டடமானது 140 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு தற்போது அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது இதன் சிறப்பம்சம். 
    இதில், காவலர்கள் பயன்படுத்திய வாள், துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அறிவுபூர்வமான திறன் மேம்பாட்டுக்கான அருங்காட்சியகமாகத் திகழும். 
    கோவை விமான நிலையத்தில் இரவு தங்கிச் செல்லும் விமானங்களுக்கு அரசு சார்பில் எரிபொருள் வரிச் சலுகை வழங்கப்பட உள்ளது. இதனால் கோவைக்கு அதிக அளவிலான விமானங்கள் வந்து செல்லும் என்றார். 
    இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் கு.பெரியய்யா, திருச்சி காவல் ஆணையர் அ.அமல்ராஜ், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் அ.பாரி, கோவை சரக டிஐஜி கார்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.சண்முகம், ஓ.கே.சின்னராஜ், கஸ்தூரி வாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    முன்னதாக, சென்னையில் இருந்து கோவை வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் அரசு மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்த தான முகாமைத் தொடங்கிவைத்தார். 
    இதில், விமான நிலைய ஊழியர்கள், கால்டாக்ஸி ஓட்டுநர்கள் ரத்த தானம் செய்தனர்.இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை டீன் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள ஆயுதங்கள் 
    தமிழக காவல் துறையில் தொடக்க காலம் முதல் பயன்படுத்திய சீருடைகள், ஆயுதங்கள், கை துப்பாக்கிகள், நாட்டுத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், குண்டுகள், சிறிய ரக பிஸ்டல், கண்ணீர் புகை குண்டுகள், மின் அதிர்ச்சி தரும் குறுந்தடி, துப்பாக்கி வெடிமருந்து உறை, ஏகே 47 போன்ற நவீன ஆயுதங்கள் இடம்பெற்றுள்ளன. 
    கோவை சரக காவல் துறைக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பரிசாக வழங்கிய வீரவாள், மலையூர் மம்பட்டியானிடம் இருந்து 1964-ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட பெரிய, சிறிய ரகத் துப்பாக்கிகள், கத்தி, சந்தனக் கடத்தல் வீரப்பனிடம் இருந்து 2002-ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட பெரிய ரகத் துப்பாக்கிகள், இலங்கை தமிழ்ப் போராளிகளிடமிருந்து 1992-ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
    இதைத் தவிர இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட டாங்கி, நவீன ஆகாஷ் ஏவுகணை, நீர் மூழ்கி ஏவுகணை, கடலோரக் காவல் படையில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் படகு உள்ளிட்ட பல அரிய பொருள்கள் இடம் பெற்றுள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai