Enable Javscript for better performance
நவீன மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிப்பில் ஐசிஎஃப்: ரயில்வே வாரியத் தலைவர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    நவீன மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிப்பில் ஐசிஎஃப்: ரயில்வே வாரியத் தலைவர் தகவல்

    By DIN  |   Published on : 18th May 2018 10:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    metro

    மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிப்புக்கான புதிய தொழில்நுட்பத்தை அறியும் பணியில், ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்புடன்(ஆர்டிஎஸ்ஓ) ஐ.சி.எஃப். இணைந்து செயல்பட்டு வருகிறது என இந்திய ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வனி லோஹானி தெரிவித்தார்.
     
    ஐ.சி.எஃப்., சிஐஐ (இந்திய தொழில் கூட்டமைப்பு) ஆகியவற்றின் சார்பில், சர்வதேச ரயில் பெட்டித் தொழில்நுட்பக் கண்காட்சி, சென்னை ஐ.சி.எஃப். கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரங்கில் வியாழக்கிழமை தொடங்கியது . இதில் பங்கேற்ற இந்திய ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வனி லோஹானி பேசியது:

    ரயில்வேயில் நவீனயுகம் ஆரம்பமாகியுள்ளது. அதிகவேக ரயில் இயக்குவதற்காக ஆமதாபாத்தில் அண்மையில் அடித்தளம் போடப்பட்டது. மாற்றங்கள் வரும்போது, நிறைய சவால்கள் இருக்கும். அதை எதிர்கொண்டு, பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும். 

    ஐ.சி.எஃப். உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. 'ரயில் 18', 'ரயில் 20' போன்ற நவீன ரயில்களை தயாரிக்கும் முயற்சியை தொடங்கியுள்ள நிலையில், இக்கண்காட்சி சவால்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும். மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிப்புக்கான புதிய தொழில்நுட்பத்தை அறியும் பணியில், ஆர்டிஎஸ்ஓ, ஐசிஎஃப் ஆகியவை இணைந்து செயலாற்றி வருகின்றன.

    தில்லியில் சில பகுதியிலும், கொல்கத்தாவிலும் அகலப் பாதையில் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான பெட்டிகள் ஐசிஎஃப் சார்பில் வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் மும்பை, கொச்சின் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 'ஸ்டாண்டர்டு' என அழைக்கப்படும் நவீனப் பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

    இத்தகைய நவீனப் பாதைகளில் ரயில்களை இயக்குவதற்கேற்ப புதிய பெட்டிகளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிய, ஆர்டிஎஸ்ஓ-வுடன் ஐசிஎஃப் இணைந்து பணியாற்றி வருகிறது என்றார்.

    நவீன எல்எச்பி பெட்டிகள்: பின்னர் அஸ்வனி லோஹானி செய்தியாளர்களிடம் கூறும்போது, 'வழக்கமாக தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் கடந்த ஏப்ரல் 1 -ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுவிட்டன. ரயில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எல்லா ரயில் பெட்டிகளும் நவீன எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன. தற்போது நாடு முழுவதும் 5,000 எல்எச்பி பெட்டிகள் உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் எல்லா ரயில் பெட்டிகளிலும் 'பயோ டாய்லட்' வசதி ஏற்படுத்தப்படும்' என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai