Enable Javscript for better performance
நாளைய நகர்வை நோக்கி நகர்கிறோம்: கமல்ஹாசன்- Dinamani

சுடச்சுட

    
    kamal

    திருச்செந்தூரில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன்.

    மக்கள் நீதி மய்யம் ஒவ்வொரு நாளும் நாளைய நகர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றார் அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
    தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு பகுதியில் வியாழக்கிழமை காலை மீனவ மக்களை சந்தித்து அவர் பேசினார். தொடர்ந்து திருச்செந்தூருக்கு வந்த அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து திறந்த வாகனத்தில் வந்த கமல்ஹாசன், தேரடித்திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியது:
    நான் மக்களை சந்திப்பதும், இந்த சுற்றுப்பயணமும் என்னை தேற்றிக்கொள்ளத்தான். மதங்கள், தெய்வங்கள் எதுவும் எனக்கு இடையூறு கிடையாது. பாரம்பரியம், கலாசாரம் மற்றும் முன்னோடிகளை வணங்குவதில் எனக்கு ஆட்சேபனை கிடையாது. இந்தியா பண்பாடு மிக்க நாடு. ஆனால், இன்றைய நிலை வேறு. இந்த நிலைக்கு நாம்தான் காரணம். நாம் குரல் கொடுத்திருந்தால் மாறியிருப்போம். எனவே தான் நான் குரல் கொடுக்கிறேன்.
    மக்களின் குறைகளைப் பதிவு செய்ய மக்கள் நீதி மய்யத்தை விசில் ஆப் மூலம் தொடர்புகொள்ளுங்கள். அதிகாரிகள் மீதும், அரசியல்வாதிகள் மீதும் குற்றச்சாட்டுகளை கூறவும், கேள்வி கேட்கவும் தயங்குபவர்கள் இந்த விசில் ஆப்பை பயன்படுத்தலாம். மக்கள் நீதி மய்யம் ஒவ்வொரு நாளும் நாளைய நகர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கல்வி நிலையங்களுக்கு நான் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்ட போதும், இளைஞர்கள், மாணவர்கள் என்னை தேடி வந்துகொண்டே இருக்கிறார்கள். எத்தனை தடைகள் வந்தாலும் சாதிப்போம் என்றார். 
    பணகுடியில்....: திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு வழியாக பணகுடிக்கு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், பேருந்து நிலையத்தில் கூடியிருந்த மக்களிடையே பேசியது:
    உங்களோடு அதிகமாக பேசவேண்டும் என்பது என் ஆசை. இது ஒரு தேடல். இந்த தேடல் தொடரும். அடிக்கடி உங்களைத் தேடி வருவேன் என்றார்.
    பிறகு அங்கிருந்து வள்ளியூருக்கு வந்த கமல்ஹாசன், அங்கு தொண்டர்களையும், ரசிகர்களையும் சந்திக்காமல், பழைய பேருந்து நிலையம் வழியாக திசையன்விளைக்குச் சென்றார். 
    இதனால், வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்கு முன் காத்திருந்த தொண்டர்கள், ரசிகர்கள், கல்லூரி மாணவிகள் என அனைத்து தரப்பினரும் ஏமாற்றம் அடைந்தனர். வள்ளியூர் பழைய, புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் கமல்ஹாசன் நிகழ்ச்சிக்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. ஆனால், திருவள்ளுவர் கலையரங்கு முன் கமல்ஹாசன் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆயினும், அங்கு அவர் பேசவில்லை.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai