Enable Javscript for better performance
நிலுவைத் தொகை கோரி மறியல்: கரும்பு விவசாயிகள் 40 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    நிலுவைத் தொகை கோரி மறியல்: கரும்பு விவசாயிகள் 40 பேர் கைது

    By DIN  |   Published on : 18th May 2018 02:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை ஆலைகள் அரவை செய்த கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது, கரும்புக்கான மாநில அரசின் பரிந்துரை விலை நடைமுறைக்குப் பதிலாக வருவாய் பங்கீட்டு முறையை அமல்படுத்தும் முடிவைக் கைவிடுவது, இந்த ஆண்டுக்கான (2017-18) கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் ஆக அறிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
    இதன்படி, கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிசாமி தலைமையில், அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை தென்னக கரும்பு விவசாயிகள் மேம்பாட்டு சங்கத் தலைவர் கே.அப்பாஸ், பொருளாளர் கே.செல்லமுத்து உள்பட கரும்பு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு கூடினர். பின்னர் அப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களைப் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விவசாயிகள் 40 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
    கோரிக்கைகள் குறித்து கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பழனிசாமி கூறியது:
    தமிழகம் முழுவதும் கூட்டுறவு, தனியார் என 43 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் கடந்த 3 ஆண்டுகளில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ரூ.212 கோடியும், தனியார் சர்க்கரை ஆலைகளில் ரூ.1,340 கோடியும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உள்ளது.
    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மட்டும் ரூ.21 கோடி நிலுவை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
    கரும்பு விலை நிர்ணயித்துக்காகப் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள கரும்பு பரிந்துரை விலை அறிவிப்பதைக் கைவிட்டு, வருவாய் பங்கீட்டு முறையைக் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை ஏற்படும். ஆகவே, இம்முடிவைக் கைவிட வேண்டும். இந்த ஆண்டுக்கு கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரமாக அறிவிக்க வேண்டும் என்றார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai