Enable Javscript for better performance
மீனவர் நலன், மீன் வளத்துக்கு தனி அமைச்சகம்: தில்லி கருத்தரங்கில் தமிழகம் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

  

  மீனவர் நலன், மீன் வளத்துக்கு தனி அமைச்சகம்: தில்லி கருத்தரங்கில் தமிழகம் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 18th May 2018 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jayakumar

  தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் பேசுகிறார் அமைச்சர் டி.ஜெயக்குமார்.

  மீனவர் நலன், மீன் வளத்துக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை சார்பில் கடலோர மாநிலங்களின் மீன்வளத் துறை அமைச்சர்களின் தேசியக் கருத்தரங்கு புது தில்லி கிருஷி பவனில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
  மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தலைமை வகித்தார். தமிழகம், ஆந்திரம், குஜராத், கேரளம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த துறை சார் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் தமிழக மீன் வளம், பணியாளர் மற்றும் நிர்வாகக் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்றுப் பேசியதாவது:
  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தின் மீன்வளத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டுவதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாற்றுவழி மீன்பிடிப்பு மூலம் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில், முன்னோடித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், மீன் பதனப் பூங்காக்கள் உருவாக்குதல், கடலோரப் பகுதியில் மீன்பிடி துறைமுகம், மீன் இறங்கு தளம் அமைப்பது, கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  படகுகளை விடுவிக்க வேண்டும்: பாக். வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டும் வகையில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேசக் கடல் எல்லை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடலில் திசை மாறிச் செல்லும் மீனவர்களை கைது செய்யவோ, துன்புறுத்தவோ கூடாது. அவர்களின் மீன்பிடி சாதனங்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் விடுவிக்க வேண்டும். இலங்கை அரசின் பிடியில் உள்ள தமிழக மீனவர்களின் 168 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ராமநாதபுரம் மாவட்டம், குந்துக்கல் மீனவ கிராமத்தில் ரூ.74 கோடி மதிப்பீட்டில் மத்திய - மாநில அரசு நிதிப் பங்களிப்புடன் மீன் இறங்கு தளம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட 'ஒக்கி' புயலால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகளை கண்காணித்தல், தேடுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வசதியாக கம்பியில்லா தகவல் தொடர்பு கருவிகள் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க மத்திய அரசு தேசிய அளவில் கொள்கைளை உருவாக்க வேண்டும்.
  தமிழக மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கடலோரப் பகுதியில் உள்ள முகத்துவாரங்களை நிரந்தரமாக திறந்து வைக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவும், மீனவர் நலன், மீன் வளத்திற்கு தனிக அமைச்சகத்தை உருவாக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஜெயக்குமார்.
  இம்மாநாட்டில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், மீன்வளத் துறை இயக்குநர் சமீரான் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்நிகழ்வின் போது மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங்கிடம் தமிழக அரசு சார்பில் மீன்வளத் துறை கோரிக்கைகள் தொடர்பான மனுவை அமைச்சர் ஜெயக்குமார் அளித்தார். 
  பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், 'தில்லி கருத்தரங்கில் தமிழக மீனவர்களின் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் வகையில் பல்வேறு கோரிக்கைகள், கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அப்போது, மீன்வளத்திற்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். சென்னை மீன்பிடித் துறைமுகத்தின் நிர்வாகத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைகளை பரீசிலிப்பதாக அமைச்சர் ராதாமோகன் சிங் கூறியுள்ளார்' என்றார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai