Enable Javscript for better performance
வரும் ஆண்டுகளில் ரயில் போக்குவரத்து மிகச் சிறப்பாக இருக்கும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்- Dinamani

சுடச்சுட

    

    வரும் ஆண்டுகளில் ரயில் போக்குவரத்து மிகச் சிறப்பாக இருக்கும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

    By DIN  |   Published on : 18th May 2018 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    purohit

    ரயில்வே துறையில் தொடரும் நவீன கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு, மின்மயமாக்கல் விரிவாக்கம் போன்ற காரணங்களால் இனிவரும் ஆண்டுகளில் பயணிகள் போக்குவரத்தும், சரக்கு போக்குவரத்தும் மிகச் சிறப்பாக இருக்கும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நம்பிக்கை தெரிவித்தார்.
    ஐ.சி.எஃப் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில், ரயில் பெட்டி தொழில்நுட்பக் கண்காட்சி சென்னை ஐ.சி.எஃப் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரங்கில் வியாழக்கிழமை தொடங்கியது. 
    இதன் தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கண்காட்சி மலர் மற்றும் ஐ.சி.எஃப் தயாரித்துள்ள 'முன்னேறும் நாட்டிற்கு புதுயுக ரயில் பெட்டிகள்' என்ற தலைப்பிலான புத்தகத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டு பேசியது:
    ரயில் உள்புற மற்றும் பாதுகாப்புத் தொடர்பான பொருள்கள், ரயில் பெட்டி தயாரிப்பு ஆகியவற்றில் நவீன தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்த இந்த கண்காட்சி உதவிகரமாக இருக்கும். 
    உலகில் 4-ஆவது மிகப்பெரிய ரயில்வேத் துறையாக இந்திய ரயில்வே திகழ்கிறது. நாள்தோறும் 13,000 பயணிகள் ரயில்கள் நீண்ட தூரம் மற்றும் புறநகர் சேவையில் ஈடுபட்டுள்ளன. சரக்கு பிரிவில் 9,200 ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. 
    இந்திய ரயில்வேயில் 2, 77,987 சரக்கு வேகன்களும், 70,937 பயணிகள் பெட்டிகளும், 11, 452 இன்ஜின்களும் தற்போது இயங்குகின்றன. மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக உள்ள இதில் 15 லட்சம் பணியாளர்கள் உள்ளனர்.
    இந்திய ரயில்வேயில் 2017-18-ஆம் ஆண்டில் மட்டும் 850 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். 120 கோடி டன் சரக்கு ரயில்வே போக்குவரத்து மூலம் கையாளப்பட்டுள்ளது.
    புதிய முயற்சிகள்: 2022-ஆம் ஆண்டில் ஒரு ஜிகாவாட் சூரியமின்சக்தி உற்பத்தி திறன் கொண்ட சூரிய ஒளி மூலம் இயங்கும் ரயில்கள் வரவுள்ளன. அத்துடன் 130 மெகாவாட் மின்திறன் கொண்ட காற்றலையும் இதில் இடம்பெறும். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலும், எரிசக்தி செலவைக் குறைக்கும் வகையிலும், ரயில் நிலைய கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமும் உள்ளது.
    ரயில்வே துறையில் தொடரும் நவீன கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, மின்மயமாக்கல் விரிவாக்கம் போன்ற காரணங்களால் வரும் ஆண்டுகளில் பயணிகள் போக்குவரத்தும், சரக்கு போக்குவரத்தும் மிகச் சிறப்பாக இருக்கும்.
    இந்த கண்காட்சி தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதாக அமையும். அத்துடன் வேலைவாய்ப்பை உருவாக்கவும் இது உறுதுணையாக இருக்கும் என்றார் ஆளுநர்.
    நிகழ்ச்சியில் இந்திய ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வனி லோஹானி, ஐ.சி.எஃப் பொது மேலாளர் சுதான்சு மணி, இந்திய தொழில் கூட்டமைப்பு தென்மண்டலத் தலைவர் ஆர்.தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    கண்காட்சியை இன்று பொதுமக்கள் பார்வையிடலாம்
    சென்னை ஐ.சி.எஃப் அருகில் உள்ள ஆர்.பி.எஃப் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இக்கண்காட்சியை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
    இக்கண்காட்சியில், 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 100 -க்கும் மேற்பட்ட ரயில் பெட்டித் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட, வருங்காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள ரயில் பெட்டிகளின் வடிவமைப்புகளை தலைசிறந்த நிறுவனங்கள் பார்வைக்கு வைத்துள்ளன. 160 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் இயக்கப்படும் ரயில்களின் மாதிரி வடிவங்கள், வருங்காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள ரயில் பெட்டிகளின் உள்கட்டமைப்பு, பயணிகளுக்கான வசதிகள், துருப்பிடிக்காத எஃகு, அலுமினியம் ஆகியவற்றால் உருவாக்கப்பட உள்ள ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு பற்றிய விவரங்களும் இடம்பெற்றுள்ளன. வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 முதல் மாலை 6 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai