நவீன இந்தியாவின் சிற்பி சர்தார் படேல்: ஆளுநர் புரோஹித் புகழாரம்

மகாத்மா காந்தியடிகள் தேசத்தின் தந்தை என்றால், நவீன இந்தியாவின் சிற்பி சர்தார் படேல் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.
ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் எதிரே உள்ள அவரது உருவச் சிலையின் கீழே அலங்கரிக்கப்பட்ட அவரது படத்துக்கு புதன்கிழமை மரியாதை செலுத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 
ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் எதிரே உள்ள அவரது உருவச் சிலையின் கீழே அலங்கரிக்கப்பட்ட அவரது படத்துக்கு புதன்கிழமை மரியாதை செலுத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 


மகாத்மா காந்தியடிகள் தேசத்தின் தந்தை என்றால், நவீன இந்தியாவின் சிற்பி சர்தார் படேல் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.
சர்தார் வல்லபபாய் படேல் நினைவு அறக்கட்டளை மற்றும் பாரதிய வித்யா பவன் சார்பில் சென்னையில் சர்தார் படேலின் பிறந்த தின விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியது:
தேசத்தின் விடுதலையில் தீவிரமாக இருந்த மகாத்மா காந்தியடிகளை 1917-ஆம் ஆண்டு செப்டம்பரில் சர்தார் படேல் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு தனது வாழ்க்கையை தேசத்தின் விடுதலைக்காக அர்ப்பணிக்க வேண்டுமென முடிவு செய்தார். இதன்பின், குஜராத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஆங்கிலேய அதிகாரிகளுக்கு எதிராகவும் பல்வேறு அமைதி வழிப் போராட்டங்களை முன்னெடுத்தார். உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற முக்கிய தலைவர்களில் வல்லபபாய் படேலும் ஒருவராவார்.
மகாத்மா காந்தியின் நெருங்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த அவர், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு வரை இந்திய தேசிய காங்கிரஸ் எடுத்த முக்கிய முடிவுகளில் அவரும் பங்கெடுத்திருந்தார். இந்திய அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் அவருடைய பங்கும் முக்கியமானது. இதற்கான வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கரை நியமனம் செய்ததன் பின்னணியில் முக்கிய காரணியாக படேல் இருந்தார்.
தேச ஒற்றுமைக்காக...
தேச ஒற்றுமையில் அவர் தனது அளப்பரிய பங்களிப்பைச் செய்தார். புதிய சுதந்திர இந்தியா உருவாக்கத்தில் முக்கியமானவராகத் திகழ்ந்தார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் சிறிய சிறிய மாநிலங்களாகச் சிதறுண்டு இருந்தன. அவைகள் பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்படாமல் இருந்தன. அவை அனைத்தையும் ஒருங்கிணைத்தார்.
தேசத்தைக் கட்டமைத்தார்: தேசத்தைக் கட்டமைக்கும் பணியில் மிகப் பெரிய சிக்கல்கள் ஏற்படும் என்று அப்போதிருந்த அரசியல் நோக்கர்கள் கவலைப்பட்டனர். ஆனால், தனது புத்திசாலித்தனத்தால் புதிய இந்திய தேசத்தைக் கட்டமைத்தார் படேல். இத்தகைய சிறப்பு வாய்ந்த அவருக்கு உலகிலேயே மிகப்பெரிய முழு உருவச் சிலை குஜராத்தில் திறக்கப்பட்டுள்ளது. அவரது அடிகளைப் பின்பற்றி, அவரது வாழ்க்கையையே படிப்பினையாகக் கொள்வோம் என்றார் ஆளுநர் புரோஹித்.
இந்த நிகழ்ச்சியில், சர்தார் வல்லபபாய் படேல் நினைவு அறக்கட்டளையின் தலைவர் என்.ஆர்.தவே, பவன்ஸ் சென்னை கேந்திரத்தின் தலைவர் என்.ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com