கடன் திட்டங்களுக்கு விதிமீறி சொத்துப் பிணையம் கேட்கும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை : அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை

முத்ரா உள்ளிட்ட மத்திய அரசின் வங்கிக் கடன் திட்டங்களுக்கு விதிகளை மீறி சொத்துப் பிணையம் கேட்கும் வங்கிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புத்
நிகழ்ச்சியில் பேசுகிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்களவை உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், எம்.எல்.ஏ. அம்மன் கே.அர்ச்சுனன்,
நிகழ்ச்சியில் பேசுகிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்களவை உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், எம்.எல்.ஏ. அம்மன் கே.அர்ச்சுனன்,


முத்ரா உள்ளிட்ட மத்திய அரசின் வங்கிக் கடன் திட்டங்களுக்கு விதிகளை மீறி சொத்துப் பிணையம் கேட்கும் வங்கிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எளிதில் கடன் பெறும் வகையிலான புதிய திட்டத்தை பிரதமர் மோடி தில்லியில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் இந்தத் திட்டம் குறித்து தொழில் முனைவோருக்கு விளக்கம் அளித்தனர். அதன்படி, கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) குறு, சிறு, நடுத்தர தொழில் துறையின் பங்கு 28.7 சதவீதமாகும். அதேபோல், ஜி.டி.பி.யில் சேவைத் துறையின் பங்களிப்பு 26 சதவீதமாக இருந்தாலும், இதில் பெரும் பங்கு வகிப்பதும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறைதான். ஒரு குறிப்பிட்ட தொழில் சார்ந்து என்று இல்லாமல் ஜவுளி, வேதியியல், மருந்து உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் சிறு, குறு தொழில்கள் பரவியுள்ளன.
ஏற்றுமதியைப் பொறுத்த அளவில் சேவைத் துறை சார்ந்த ஏற்றுமதியில் சுமார் 25 சதவீதமும், உற்பத்தித் துறையில் 12 சதவீத ஏற்றுமதியில் 6 சதவீதமும் குறு, சிறு தொழில் துறையின் பங்கு உள்ளது. நாடு முழுவதிலும் சுமார் 2 கோடி பேர்களுக்கு இந்தத் துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவில் பெரிய தொழில் நிறுவனங்கள் ஆங்காங்கே இருந்தாலும், குறு, சிறு தொழில் நிறுவனங்கள்தான் நாடு முழுவதிலும் பரவியுள்ளன. இயற்கையிலேயே நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் குடும்பம் குடும்பமாக ஈடுபட்டு வரும் குறு, சிறு நிறுவனங்கள்தான் இந்திய பொருளாதாரத்துக்கே ஆதாரமாகத் திகழுகின்றன.
நாட்டின் இயற்கைத் தன்மைக்கு பொருந்திப் போவது குறு, சிறு தொழில்கள்தான். பல தலைமுறைகளாக இந்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஏராளமான தொழில்கள் உள்ளன. அதனால்தான் இங்கு தயாரிக்கப்படும் பல பொருள்களுக்கு புவிசார் குறியீடுகள் கிடைக்கின்றன. பல்வேறு முக்கியத்துவங்களைக் கொண்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறைக்கு உதவும் நோக்கத்தில்தான், சுமார் 10 துறைகளில் உள்ள குறு, சிறு தொழில் முனைவோர்களை நிதித் துறையின் கீழ் ஒருங்கிணைத்து, கடன் பெறுவது, சலுகைகளைப் பெறுவது போன்றவற்றை எளிதாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தற்போது 100 நாள்களில் 100 நகரங்களுக்குத் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் சரிவர செயல்படுகிறதா என்பதை பிரதமர் மோடியே நேரடியாக கண்காணிக்க இருக்கிறார். அரசு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து குறைந்தபட்சம் 20 சதவீதம் அளவுக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே இருக்கும் அரசாணையை சிறு தொழில் முனைவோர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு 25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
ஜாப் ஆர்டர்களுக்கு 18 சதவீதமாக இருக்கும் ஜி.எஸ்.டி.யை குறைப்பதற்காக ஏற்கெனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நானும் தனிப்பட்ட முறையில் இது தொடர்பாக வலியுறுத்துவேன். முத்ரா உள்ளிட்ட மத்திய அரசின் வங்கிக் கடன் திட்டங்களுக்கு விதிகளை மீறி சொத்துப் பிணையம் கேட்கும் வங்கிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ராணுவத் தளவாடங்களை அமைக்கும் தொழிற்பேட்டையை எந்த இடத்தில் தொடங்குவது என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
ரஃபேல் கொள்முதல் பற்றி மாறி மாறி பேசி வரும் ராகுல் காந்தி குழப்பத்தில் இருக்கிறார். மத்திய அரசின் திட்டங்கள் மாநிலங்களுக்கு வருவதில்லை என்று மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை கூறியுள்ளார். ஆனால் அதுபோல் எந்தத் திட்டம் தமிழகத்துக்கு வரவில்லை என்று எனக்குத் தெரியாது என்பதால் அதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றார் அவர்.
நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுற்றுலாத் துறை இணைச் செயலர் சுமன் பில்லா, ஏ.பி.நாகராஜன் எம்.பி., பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ., பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com