ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை: பயணிகள் குமுறல்

தீபாவளிப் பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைவிட இருமடங்கு அதிகமாக பயணக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை: பயணிகள் குமுறல்

தீபாவளிப் பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைவிட இருமடங்கு அதிகமாக பயணக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். தீபாவளி போன்ற பண்டிகை நாள்களையொட்டி, சென்னையிலிருந்து  தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே  விரும்புகின்றனர்.  எனினும், ரயில்களில் டிக்கெட்  கிடைக்கப் பெறாதோர் பேருந்துப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதிலும் வசதியாக பயணம் செய்ய விரும்புவோர் பெரும்பாலும் ஆம்னி பேருந்துகளையே நாடுகின்றனர்.
பயணிகளின் இந்த மனநிலையை தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்  கொண்டு, வழக்கமான பயணக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
கட்டணம் இருமடங்கு உயர்வு: குறிப்பாக, சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக ரூ.600  முதல்  ரூ.1,500 வரையிலும், சென்னை - கோவைக்கு இயக்கப்படும் பேருந்துகளில் ரூ.700  முதல்  ரூ.1,700 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தற்போது, தீபாவளி பண்டிகையை காரணம் காட்டி ரூ.500 முதல் ரூ.1,200 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டு வந்தாலும், ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னரே ஆம்னி பேருந்துகளின் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு, இடைத்தரகர்கள் மூலம் கூடுதல் கட்டணத்துக்கு டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
புகார் தெரிவிக்கலாம்: இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியது: 
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பயணிகளின் தேவைக்கேற்ப போதிய பேருந்துகளை இயக்குகிறோம். மேலும், அவர்கள் விரும்பும் வசதிகளைக் கொண்ட பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இருந்தாலும் மக்கள் ஏன் ஆம்னி பேருந்துகளை நாடுகின்றனர் எனப் புரியவில்லை. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 4256151 என்ற எண்ணில் புகார் செய்யலாம். ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து எவ்வித புகார்களும் வருவதில்லை. இந்திய மோட்டார் வாகனச் சட்டப்படி ஆம்னி பேருந்துக் கட்டணம்  நிர்ணயம் செய்யப்படவில்லை. "கான்ட்ராக்ட் கேரேஜ்' என்ற முறையில் அவை  இயக்கப்படுவதால் சூழ்நிலைக்கேற்ப கட்டணம் இருக்கும். இருந்தாலும் பொதுமக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க கண்காணிப்புக்  குழுக்கள் அமைத்து ஆய்வு செய்து வருகின்றோம். அப்போது அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கையும் எடுக்கிறோம் என்றனர் அவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com