கந்து வட்டியால் கதறும் ஏழைகள்

பொதுவாக விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வறட்சி மற்றும் வருவாய் குறைவு உள்ள காலங்களில், தங்கள் குடும்பச் செலவு, மருத்துவச் செலவு, பிள்ளைகளின் படிப்புச் செலவு
கந்து வட்டியால் கதறும் ஏழைகள்

திருநெல்வேலி: பொதுவாக விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வறட்சி மற்றும் வருவாய் குறைவு உள்ள காலங்களில், தங்கள் குடும்பச் செலவு, மருத்துவச் செலவு, பிள்ளைகளின் படிப்புச் செலவு, வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்ற சூழ்நிலைகளில் பணத்துக்கு திணறுவது வாடிக்கைதான். 

அப்படிப்பட்ட நேரத்தில் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் "கைமாற்று' வாங்குதல்; சீட்டு போட்டிருந்தால் ஏலத்தொகை அதிகமாக போனாலும் பரவாயில்லை என எடுத்து பயன்படுத்துதல்; வேறு வழியே இல்லையென்றால், வட்டிக்காவது பணத்தை வாங்கி பின்னர் அவற்றை நேர்மையாக திரும்பச் செலுத்துவது வழக்கம்.

குறைந்த வட்டிக்கு கடன் கொடுப்பவர்களிடம் உடனடியாக கடன் தொகையைப் பெற்றுவிட முடியாது. ஏதாவது ஒரு காரணம் கூறி, கால தாமதம் செய்வர். மேலும், கடன் தொகைக்கு ஈடாக சொத்து ஆவணங்கள் கேட்பர். ஆனால், அதிக வட்டிக்கு கடன் கொடுப்பவர்களைப் பொருத்த அளவில், நிரப்பப்படாத பிராமிசேரி நோட்டு, வெற்றுப் பேப்பரில் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்து வாங்கிக் கொண்டோ அல்லது நிரப்பப்படாத வங்கிக் காசோலையில் கையெழுத்து பெற்றுக் கொண்டோ உடனடியாக கடன் தொகையை வழங்கிவிடுவர். இதனால் ஆரம்பத்தில் இவர்கள் நம்மை காக்க வந்த கடவுளாகத்தான் தோன்றும் கடன் பெறுபவர்களுக்கு.

தற்போது இதை முழு நேர தொழிலாக செய்து வரும் சிலர், வார வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, எக்ஸ்பிரஸ் வட்டி என பல்வேறு பெயர்களில் மாதம் ஒன்றுக்கு 3 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி வசூலித்து வருகின்றனர்.

வணிகர்களே இலக்கு 

கடன் கொடுப்பவர்களைப் பொருத்தளவில், வணிக கேந்திரமாக விளங்கும் முக்கிய நகரங்களில் பலதரப்பட்ட வணிகர்கள், சரக்கு கொள்முதல் தேவைக்காக- கூடுதல் வட்டியாக இருந்தாலும் பரவாயில்லை என கடன் வாங்குகின்றனர். காலையில் வாங்கி மாலையில் திருப்பி கொடுப்பது; வாங்கிய ஒரு மணி நேரத்துக்குள் திருப்பிக் கொடுப்பது; ஒரு நாள், இரு நாள் கழித்து திருப்பிக் கொடுப்பது என பல்வேறு நிலைகளில் அவர்கள் கடனைப் பெறுகின்றனர். 

தொடக்கத்தில் மிக எளிமையாகத் தோன்றும் இத்தகைய கடன்கள், போகப் போக பெரும் சுமையாக மாறிவிடுகிறது. ஆரம்பத்தில் கடவுளாக தெரியும் கடன் கொடுப்பவர், போக போக வில்லனாகவே மாறிவிடுவார்.

வியாபாரிகள், வணிகர்களுக்கு வர வேண்டிய தொகை குறிப்பிட்ட நேரத்துக்குள் வராதபோது, வட்டிச் சுழலுக்குள் மாட்டி சிதைந்துவிடுகின்றனர். இத்தகைய கடன்களை வாங்கி, திரும்பச் செலுத்த முடியாதவர்களில் சிலர், ரூ.30 லட்சம் கடனுக்கு ரூ. 3 கோடி மதிப்பிலான சொத்துகளை இழந்த வரலாறுகள் உள்ளன. கடன் விவகாரங்களால் தம்பதிகளுக்குள் விரிசல் ஏற்பட்டு குடும்பங்கள் சிதைகின்றன.

வணிகத்துக்கு கடன் வழங்கி வந்த நிலை மாறி, தற்போது கிராமத்தில் உள்ள பீடித் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. இதனால் ஒருவரிடம் கடன் வாங்கும் தொழிலாளி, கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலை வரும்போது மற்றொருவரிடம் கடன் வாங்கி முந்தைய கடனை அடைக்கிறார். பின்னர் அவருக்கு கட்ட வேண்டியதை மற்றொருவரிடம் வாங்கி அடைக்கிறார். இப்படியே காலம் முழுவதும் வட்டி கொடுப்பதற்காக மட்டுமே உழைக்கும் நிலை உள்ளது. இதனால் தங்கள் குடும்பத்துக்கு நல்ல உணவு, உடை, இருப்பிட வசதி, பிள்ளைகளுக்குத் தரமான கல்வி வசதி செய்துகொடுக்க முடிவதில்லை.

மகளிர் குழுக்கள் கடன்

வங்கிகள் மட்டும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி வந்தபோது மகளிர் குழுக்களில் பிரச்னை இல்லாமல் இருந்து வந்தது. இதில் தனியார் நிதி நிறுவனங்களும் நுழைந்த பின்னர்தான், மகளிர் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரிடம் வாங்கி, கூடுதல் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர். கணவருக்குத் தெரியாமல் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கிவிட்டு, பின்னர் அதைத் திருப்பிச் செலுத்த அவஸ்தைப்படும் பெண்கள் ஏராளம். பல இடங்களில் வசூலுக்கு செல்பவர்களால் பாலியல் தொந்தரவுகளும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

தீர்வு 

வட்டிக்கு கடன் கொடுப்போர், கடன் பெறுபவர்களின் சொத்துகளை கிரையப் பத்திரமாக பதிவு செய்வதை தடுக்க வேண்டும். வீட்டுக் கடன், கல்விக் கடன், தொழில் கடன் வழங்குவதுபோல், அனைத்து தரப்பினருக்கும் முக்கியமான குடும்பத் தேவைகளுக்கு, அரசு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com