நெல் விலையைவிட உரம் விலை அதிகரிப்பு

நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதைவிட உரங்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
நெல் விலையைவிட உரம் விலை அதிகரிப்பு

தஞ்சாவூர்: நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதைவிட உரங்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

 நெல் கொள்முதல் விலையை மத்திய அரசு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் உயர்த்தி,  குவிண்டாலுக்கு (100 கிலோ) பொது ரகத்துக்கு ரூ. 1,800-ம், சன்ன ரகத்துக்கு ரூ. 1,840-ம் விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லுக்கு குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ. 2,500 விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதேபோல, இடுபொருள்களில் ஒன்றான உர விலையும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது. இதனால், கூட்டுறவு கடன் சங்கங்களில் 50 கிலோ மூட்டை டி.ஏ.பி. ரூ. 1,150-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில்,  இப்போது ரூ. 1,290 ஆக உயர்ந்துள்ளது. இதுவே, வெளிச்சந்தையில் ரூ. 1,400 முதல் ரூ. 1,425 வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.

பொட்டாஷ் விலை கூட்டுறவு கடன் சங்கங்களில் 50 கிலோ மூட்டைக்கு ரூ. 670-லிருந்து ரூ. 701 ஆகவும், வெளிச்சந்தையில் ரூ. 950-லிருந்து ரூ. 1,200 ஆகவும் உயர்ந்துள்ளது. கூட்டு உரம் 50 கிலோ மூட்டை கூட்டுறவுச் சங்கங்களில் ரூ. 900-லிருந்து ரூ. 950 ஆகவும், வெளிச்சந்தையில் ரூ. 1,150 ஆகவும் உயர்ந்துள்ளது. அமோனியம் குளோரைடு வெளிச்சந்தையில் ரூ. 700-லிருந்து ரூ. 750 ஆகவும், சல்பேட் ரூ. 800 ஆகவும் அதிகரித்துள்ளது. இவை இரண்டும் கூட்டுறவு கடன் சங்கங்களில் கிடைப்பதில்லை.

யூரியா விலை உயர்த்தப்படாமல் 270 ரூபாய் என்ற நிலையிலேயே உள்ளது. ஆனால், 50 கிலோ மூட்டை என்பது 45 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவும் விலை ஏற்றத்தைப் போன்றதுதான்.

ஆனால், நெல் விலையைப் பொருத்தவரை உயர்த்தப்பட்ட பிறகும், 50 கிலோ மூட்டைக்கு - பொது ரகம் என்றால் ரூ. 900,  சன்ன ரகம் என்றால் ரூ. 920 - மட்டுமே உள்ளது. எனவே, நெல்லுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட கூடுலாக உரங்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால், சாகுபடிச் செலவும் அதிகரித்துள்ளதால், விவசாயிகளிடையே அதிருப்தி நிலவுகிறது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கக் கெளரவத் தலைவர் நெடார் எஸ். தர்மராஜன் தெரிவித்தது:

நெல் சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு அடியுரமாக டி.ஏ.பி. ஒரு மூட்டையும், யூரியா அரை மூட்டையும், முதல் களை எடுப்பின்போது மேலுரமாகக் கூட்டு உரம் முக்கால் மூட்டையும், யூரியா அரை மூட்டையும், இரண்டாவது களை எடுப்பின்போது மேலுரமாக யூரியா, பொட்டாஷ் தலா அரை மூட்டையும், கதிர் விடும் தருணத்தில் அமோனியம் குளோரைடு அரை மூட்டையும் தெளிக்க வேண்டும். இந்தச் சாதாரணமான நடைமுறையை மேற்கொண்டால்தான் ஏக்கருக்கு 30 மூட்டைகள் மகசூல் கிடைக்கும்.

நெல் சாகுபடியைப் பொருத்தவரை, முன்பைவிட சாகுபடி செலவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, நாற்றங்கால் பறிப்பு, நடவு செய்தல் பணிகளுக்கான கூலி, பூச்சி மருந்து விலை உள்ளிட்டவை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே, ஏக்கருக்கு ரூ. 25,000 செலவாகி வரும் நிலையில், உரங்களின் விலை உயர்வால் செலவு மேலும் கிட்டத்தட்ட ரூ. 1,000 அதிகரித்துள்ளது. மேலும் சாகுபடி செலவும் அதிகரித்துள்ள நிலையில், உர விலையும் உயர்த்தப்பட்டதால் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளோம் என்றார் தர்மராஜன்.

இந்நிலையில், கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும் உரம் போதுமான அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும், தனியார் கடைகளில் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் விவசாயிகள் புகார் எழுப்பி வருகின்றனர்.

மேலும், கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆதார் அட்டையைக் காட்டி விரல் ரேகையும் வைத்த பிறகுதான் உரம் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், சில தனியார் வியாபாரிகள் இதேபோல ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, மொத்தமாகக் கொள்முதல் செய்து, வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஆதார் அட்டையுடன் சிட்டா அடங்கலும் காட்டும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் என்ற நிலையை உருவாக்கினால்தான் இந்த முறைகேட்டைத் தடுக்க முடியும் என்கின்றனர் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com