சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்புத் தரப்பு ஒப்புதல் 

அதிமுகவினரின் கடும் எதிர்ப்பை அடுத்து சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க 
சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்புத் தரப்பு ஒப்புதல் 

சென்னை: அதிமுகவினரின் கடும் எதிர்ப்பை அடுத்து சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்புத் தரப்பு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படமானது தீபாவளி தினமான நவம்பர் 6 அன்று  வெளியாகியுள்ளது.

விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு கட்டியம் கூறும் வகையில் படத்தில் சமகால அரசியலை விமர்சிக்கும் வகையில் அரசியல் கருத்துக்கள் தூக்கலாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள அரசை விமர்சிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்; இலவசங்கள் வேண்டாம் என்பதை மக்களே ஏற்க மாட்டார்கள்; திரைப்படம் எடுக்கிறோம் என்ற பெயரில் சர்கார் படக்குழுவினர் வன்முறையைத் தூண்டும் வகையில் தீவிரவாதிகள் போன்று செயல்படுகின்றனர். அத்தகைய காட்சிகளுக்காக நடிகர் விஜய், படத் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் படத்தினை திரையிட்ட திரையரங்கங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் தொடர்ச்சியாக தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.பி.அன்பழகன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் புதனன்று கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக வியாழனன்று மதுரையில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த படம் திரையிடப்பட்டுள்ள சினிப்ரியா திரையரங்கத்தின் வெளியே இந்த போராட்டம் நடைபெற்றது. அதேபோல கோவையிலும் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கத்திற்கு வெளியே அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். 

அடுத்த கட்டமாக மதுரை, கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் சர்கார் படத்திற்கு எதிரான அதிமுகவின் போராட்டம் வியாழன் மாலை துவங்கியது. 

சென்னை ஜாபர்கான்பேட்டை காசி, விருகம்பாக்கம் ஐநாக்ஸ் மற்றும் குரோம்பேட்டை வெற்றி ஆகிய திரையரங்கங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அங்கு கூடியுள்ள அதிமுகவினர் விஜய்க்கு எதிராக கடுமையாக கோஷங்கள் எழுப்பி வருவதோடு, திரையரங்க வாயில்களில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பேனர்களை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் அதிமுகவினரின் கடும் எதிர்ப்பை அடுத்து சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்புத் தரப்பு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக கோவை மேற்கு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியன் கூறியதாவது:

சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் ஆளும் அதிமுக அரசை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமைச்சர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக காலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  எனவே அத்தகைய காட்சிகள மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பது போல் அமைந்துள்ள கதாபாத்திரத்தின் பெயர் இடம்பெறும் காட்சிகளை நீக்குவது என்று தயாரிப்புத் தரப்பு மற்றும் விநியோகஸ்த தரப்புடன் பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது.  

இன்று இரவு திரையரங்கத் தரப்பு மற்றும் தயாரிப்புத் தரப்பும் இணைந்து பேசி எந்த காட்சிகளை நீக்குவது என்று முடிவு செய்யப்படும். அவ்வாறு காட்சிகள் நீக்கப்பட்டாலும்  படத்தின் விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொள்வோம்.  இதுதெடர்பாக இயக்குநர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜயுடன் ஆலோசனையில் ஈடுபடவில்லை.  படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.    

நாளை காலை 10 மணிக்கு மத்திய தணிக்கை குழுவின் ஒப்புதலோடு குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட்டு, நாளை மதியம் முதல் திரையிடல் மீண்டும் துவங்கும்.சர்ச்சைக்குரிய காட்சிகளோடு யார் மனதும் புண்படும்  வகையில் திரையிடல் இடம்பெறாது என்று எங்கள் தரப்பில் உறுதி அளிக்கிறோம். தமிழக அரசு எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.       

எனவே அது வரையில் அதிமுக தரப்பினர் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com