ஆதரவற்ற முதியவர்களைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா?

சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நகர்ப் பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியவர்களை மீட்டு, காப்பகத்திற்கு கொண்டு சென்று காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது
ஆதரவற்ற முதியவர்களைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா?

சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நகர்ப் பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியவர்களை மீட்டு, காப்பகத்திற்கு கொண்டு சென்று காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது .
 சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மனநிலை பாதிக்கப்பட்டு முதியவர்கள் ஆங்காங்கே இருப்பதை காணலாம். இவர்களை உரிய முறையில் கவனித்துப் பராமரிக்க மனமின்றி உறவினர்களே கைவிட்டுச் செல்லும் அவலம் தொடர்கதையாக உள்ளது. இதனால் அவர்கள் யார் என்றும் எந்த ஊர் என்றும் தெரியாத நிலை உள்ளனர். முதியவர்கள் அனாதைகள் போல் சாலைகள், ரயில் நிலைய வாயில், மருத்துவமனை வளாகம் ஆகியவற்றில் கேட்பாரற்று படுத்திருக்கின்றனர்.
 இதில் ரயில் நிலையத்தில் இறக்கி விடப்படும் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பிறமாநில மொழிகளில் புலம்புகின்றனர். இவ்வாறு வரும் இளம்பெண்களுக்கு இரவு நேரங்களில் சில நபர்கள் குடிபோதையில் பாலியல் தொந்தரவு கொடுக்கின்றனர்.
 இதனால் மேலும் பாதிக்கப்படும் அவர்கள் பின்னர் காணாமல் போய் விடுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. இதுபோன்ற சம்பவங்களை அவர்கள் மூடி மறைப்பதால், குடிபோதையில் இருக்கும் நபர்களால் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் இரவு நேரத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் அது உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்றுவிடுகிறது.
 இது ஒரு பக்கம் இருக்க, தங்களை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை சிலர் ரயில்களில் அழைத்து வந்து ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் ரயில் நிலைய வாயிலிலும், நடைமேடைகளிலும் முதியவர்கள் ஈ, கொசு மொய்க்கும் நிலையில் பசி பட்டினியோடு சுருண்டு படுத்திருக்கும் அவல நிலை காணப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் இது தொடர்பாக ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் கேட்டால் "இதில் முடிவு எடுக்க தங்களுக்கு அதிகாரம் கிடையாது' என தட்டிக்கழிக்கின்றனர். மேலும் முதியோர் பாதுகாப்பிற்கான டோல் ஃப்ரீ எண்ணும் தெரியாது எனக்கூறி அது பற்றிக் கேட்பவர்களுக்கு அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். இதனால் ரயில் பயணிகளும், சமூக ஆர்வலர்களும் இந்த விவகாரத்தைக் கண்டு கொள்ளாமல் சென்று விடுகின்றனர்.
 செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு முதியவர்களை பேருந்து மூலமும், ஆட்டோவிலும் அழைத்து வரும் சிலர் அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பதில்லை. அங்கு அனுமதித்தால், தங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களைத் தர வேண்டிவரும் என்பதால் அரசு மருத்துவமனை வளாகத்தில் விட்டுச் செல்கின்றனர். யாராவது மனிதநேயத்துடன் உணவு வாங்கி கொடுத்தாலும் அதை சாப்பிடக்கூட முடியாமல் உள்ளனர். இந்நிலையில், ஒரு மூதாட்டியை சிலர் கடந்த புதன்கிழமை ஆட்டோவில் அழைத்து வந்து செங்கல்பட்டு மருத்துவமனை வளாகத்தில் இறக்கிவிட்டுச் சென்றனர். அந்த மூதாட்டியால் எழுந்து அமரக் கூட முடியவில்லை. அவருக்கு ஒரு சிலர் வியாழக்கிழமை உணவு வாங்கிக் கொடுத்தனர். அதை எடுத்து சாப்பிட முடியாமல் அந்த மூதாட்டி படுத்தே கிடந்தார்.
 பனியிலும், குளிரிலும் வாடும் அவருக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அவரைப் போன்றவர்களைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியவர்களை இப்படி இரக்கமில்லாமல் விட்டுச் செல்பவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணித்து முதியவர்களை அனாதையாக விட்டுச் செல்பவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com