மத்திய, மாநில அரசுகளை விரட்டும் வல்லமை திமுகவுக்கே உண்டு: மு.க. ஸ்டாலின்

மத்திய, மாநில அரசுகளை விரட்டியடிக்கும் வல்லமை திமுகவுக்குத்தான் உண்டு என்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
மத்திய, மாநில அரசுகளை விரட்டும் வல்லமை திமுகவுக்கே உண்டு: மு.க. ஸ்டாலின்

மத்திய, மாநில அரசுகளை விரட்டியடிக்கும் வல்லமை திமுகவுக்குத்தான் உண்டு என்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
 பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் பிரிவுச் சாலை பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
 மத்தியில் ஆளும் பாசிச பா.ஜ.க அரசையும், தமிழகத்தை ஆளும் ஊழல் அரசையும் அகற்ற அறைகூவல் விடுக்கும் போர்க்களமாகவே இக்கூட்டம் நடைபெறுகிறது.
 பண மதிப்பிழப்பு மூலம் பிரதமர் மோடி இந்திய மக்களை வாட்டி வதைத்த தினம் (நவ. 8). கருப்பு பணம் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, தீவிரவாத அழிப்பு, கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த என இதற்கு காரணம் கூறப்பட்டது. ஆனால், இவை எதையும் பண மதிப்பிழப்பால் சாதிக்க முடியவில்லை.
 ஆட்சிக்கு வந்த 100 நாளில் கருப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடுவோம் எனக் கூறிய பிரதமர் மோடி அவ்வாறு செய்யவில்லை. இனி இந்தியாவில் பசியிருக்காது, வேலைவாய்ப்பின்மை இருக்காது, பட்டினிச் சாவு இருக்காது, ஊழல் இருக்காது என்றார் மோடி. ஆனால், இவை அனைத்தும் இந்தியாவில் நீக்கமற உள்ளன.
 பிரதமர் நாட்டில் இருப்பதே இல்லை. இதுவரை 84 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் செய்து அதற்காக ரூ. 1,484 கோடி செலவழித்துள்ளார். உலகில் அதிக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த பிரதமர் என்பதுதான் அவர் செய்த சாதனை.
 மாநில அரசுகளை மதிக்காத தன்மை, உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவது, ரிசர்வ் வங்கியுடன் மோதல் என எதேச்சதிகாரமாக செயல்படுவதால் மத்திய அரசை எதிர்க்கிறோம்.
 தமிழகத்தில் ஊழல் மிகுந்த ஆட்சி மக்களை வாட்டி வதைக்கிறது. தனது உறவினர்களுக்கு அரசு ஒப்பந்தங்களை வழங்குகிறார் என முதல்வர் மீது ஆதாரத்துடன் திமுக தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் ஆட்சியை விட்டு இறங்காமல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் எடப்பாடி.
 இந்தியாவிலேயே முதல்வர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை.
 அமைச்சர்கள் சிலர் மீதும் சிபிஐ விசாரணை நடைபெறுகிறது. வருமான வரி சோதனையில் சில அமைச்சர்கள் சிக்கியுள்ளனர். சிலர் மீது அமலாக்கப் பிரிவு விசாரணை நடைபெறுகிறது. இப்படிப்பட்ட ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. இந்த இரு ஆட்சிகளையும் அகற்ற நாம் உறுதியேற்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.
 கூட்டத்துக்கு பெரம்பலூர் மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில அமைச்சர் கே.என். நேரு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மதிவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com