இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தலைவர்கள் கண்டனம்

இலங்கை நாடாளுமன்றத்தை அந்த நாட்டு அதிபர் சிறீசேனா கலைத்துள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தலைவர்கள் கண்டனம்

இலங்கை நாடாளுமன்றத்தை அந்த நாட்டு அதிபர் சிறீசேனா கலைத்துள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 மு.க.ஸ்டாலின்: அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதித்து, சிறிதும் மனசாட்சியின்றி, நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ள இலங்கை அதிபர் சிறீசேனாவின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கிறது. மிக மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி அதன் மூலம் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் மிகப் பெரிய ஏமாற்றத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளார். இந்த ஜனநாயகப் படுகொலைக்கு, இந்திய அரசு உடனடியாக கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் அமைதியாக, பாதுகாப்பாக, கண்ணியத்துடன் வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
 வைகோ (மதிமுக): இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் அதிகார சதுரங்கப் போட்டியில் தமிழ் இனப் படுகொலை நடத்திய ராஜபட்சவின் தமிழர் ரத்தம் தோய்ந்த கரங்களில், இலங்கையின் முழு அதிகாரத்தையும் மீண்டும் வழங்க சிறீசேனா திட்டமிட்டு சதி நாடகத்தை நிறைவேற்றி விட்டார். 2019-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று இலங்கை அதிபர் அறிவித்துள்ளார். சிங்களப் பேரினவாதத்தின் உச்சகட்ட அராஜகம் மீண்டும் அரங்கேறப் போகிறது. சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான் ஈழத் தமிழர் பிரச்னைக்கு ஒரே தீர்வு.
 அன்புமணி (பாமக): இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் திடீரென கலைத்திருப்பது மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலை. இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு ராஜபட்ச நியமிக்கப்பட்ட போதே இந்தியா தலையிட்டிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்திருக்காது. இனியும் அலட்சியம் காட்டாமல், இலங்கை விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும்.
 பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி): தன்னால் நியமிக்கப்பட்ட ராஜபட்சவுக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்பதை உணர்ந்ததாலேயே சிறீசேனா நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார். இது சர்வாதிகாரத்துக்கே வழிவகுக்கும். ஏற்கெனவே அழிவுக்குள்ளாகித் தவிக்கும் ஈழத் தமிழர்கள் மேலும் பேரழிவுக்குள்ளாவர். உலக நாடுகள் இலங்கைப் பிரச்னையில் தலையிட்டு ஜனநாயகத்தை மீட்கவும், ஈழத் தமிழர்களைக் காக்கவும் முன்வர வேண்டும்.
 தொல்.திருமாவளவன்(விசிக): ராஜபட்சவுக்குப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நள்ளிரவில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் அதிபருக்கு இல்லை. ராஜபட்சவோடு கூட்டு சேர்ந்து சட்டவிரோதமாக இலங்கை அதிபர் செயல்படுவது ஈழத் தமிழர்களுக்கும், இலங்கையின் ஜனநாயகத்துக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
 டிடிவி தினகரன் (அமமுக): இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட செய்தி, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பேரிடியை ஏற்படுத்தியுள்ளது. கொடூர நாள்களின் சுவடுகள் மறைந்து தமிழர்கள் அமைதியான வாழ்வை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தகர்ந்துவிட்டது. இனவெறி கொண்ட ராஜபட்சவுக்கு அதிகாரத்தைக் கொடுக்க முயற்சிப்பது ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும். இந்திய அரசு இந்த நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், நலனுக்கும் தீங்கு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ஜி.கே.வாசன் (தமாகா): இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அங்குள்ள தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. தமிழர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்.
 நிஜாமுதீன் (இந்திய தேசிய லீக்): இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சர்வாதிகாரம். ஏற்கெனவே அழிவுக்குள்ளாகி தவிக்கும் ஈழத் தமிழர்கள் இதனால் மேலும் பாதிப்புக்குள்ளாவர். இலங்கைக்கான இந்திய அரசின் வெளியுறவு கொள்கை தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. இந்தப் பிரச்னையில் இந்திய அரசு தலையிட்டு ஜனநாயகத்தை மீட்கவும், ஈழத் தமிழர்களைக் காக்கவும் முன்வர வேண்டும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com