டிச.2-இல் யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு நிறைவு விழா: உத்ஸவர் திருமேனியுடன் 3 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் வர ஏற்பாடு

திருவண்ணாமலையில் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, வரும் டிசம்பர் 2-ஆம் தேதி பகவான் உத்ஸவர் திருமேனியுடன்
டிச.2-இல் யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு நிறைவு விழா: உத்ஸவர் திருமேனியுடன் 3 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் வர ஏற்பாடு

திருவண்ணாமலையில் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, வரும் டிசம்பர் 2-ஆம் தேதி பகவான் உத்ஸவர் திருமேனியுடன் 3 ஆயிரம் பக்தர்கள் 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 திருவண்ணாமலை - செங்கம் சாலையில் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமம் உள்ளது. இங்கு, பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு ஜயந்தி விழா கடந்த 2017 நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் நிறைவு விழா வரும் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
 இந்த நிலையில், நிறைவு விழாவுக்கான அழைப்பிதழ் வெளியீட்டு விழா சனிக்கிழமை ஆஸ்ரம வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஆஸ்ரம அறங்காவலர் மதர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். அறங்காவலர்கள் ஜி.சுவாமிநாதன், மதர் ஜி.ராஜேஸ்வரி, பி.ஏ.ஜி.குமரன், டி.கணபதி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 அறங்காவலர் டி.எஸ்.ராமநாதன் நிறைவு விழாவுக்கான அழைப்பிதழை வெளியிட, முதல் பிரதியை அறங்காவலர் மா தேவகி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, டி.எஸ்.ராமநாதன், மா தேவகி ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 பகவான் யோகி ராம்சுரத்குமார் திருவண்ணாமலையில் வாழ்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தவர். இவரது நூற்றாண்டு நிறைவு விழா வரும் 30-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 நவம்பர் 30-ஆம் தேதி காலை 6.30 முதல் 10.30 மணி வரை ஹோமம், அபிஷேகம், அர்ச்சனை, காலை 10.30 முதல் பிற்பகல் 12.30 மணி வரை ஸ்ரீமுரளீதர சுவாமியின் பிரவச்சனம் நிகழ்ச்சி, மாலை 4.15 முதல் 6.15 மணி வரை காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் ஸ்ரீராஜேஷ் வைத்யா தலைமையிலான சங்கீத வித்வான்களின் இணைவுக் கச்சேரி, மாலை 6.30 முதல் இரவு 8.30 மணி வரை ஓ.எஸ்.சுந்தர் குழுவினரின் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.
 டிசம்பர் 1-ஆம் தேதி காலை 7 முதல் பிற்பகல் 12.30 மணி வரை ஹோமம், ஏகாதச ருத்ர பாராயணம், மகா அபிஷேகம், காலை 10 மணிக்கு யோகி ராம்சுரத்குமாரின் 100-ஆவது ஜயந்தி தின சிறப்பு தபால் உறை வெளியீட்டு விழா நடைபெறுகின்றன. தமிழக முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் எம்.சம்பத் தபால் உறையை வெளியிட, ஸ்ரீமுரளீதர சுவாமிகள் பெற்றுக்கொள்கிறார்.
 மாலை 4 முதல் 6 மணி வரை ஸ்ரீமுரளீதர சுவாமிகளின் பிரவச்சனம் நிகழ்ச்சி, மாலை 6.15 முதல் இரவு 8.15 மணி வரை அனுராதா ஸ்ரீராம் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெறுகின்றன.
 டிசம்பர் 2-ஆம் தேதி காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை சவிதா ஸ்ரீராம் குழுவினரின் பஜனை மற்றும் அபங்கம் நிகழ்ச்சியும், பிற்பகல் 2 மணிக்கு அனைத்து சத்சங்க சமிதிகளுடன் பகவான் அண்ணாமலை கிரிவலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் உத்ஸவர் திருமேனியை வைத்து 15-க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் பக்திப் பாடல்களை பாடியபடி வலம் வருகின்றனர்.
 ஊர்வலத்தை ஸ்ரீமுரளீதர சுவாமிகள் தொடக்கிவைக்கிறார். நவம்பர் 27 முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை காலை, மாலை வேளைகளில் யஜூர்வேத கன பாராயணம், டிசம்பர் 3, 4-ஆம் தேதிகளில் காலை, மாலை வேளைகளில் சர்வ சாகா சம்மேளனம் நடைபெறுகின்றன.
 விழா நாள்களில் தினமும் காலை 5 முதல் இரவு 8 மணி வரை சுப்ரபாதம், அகவல், ஆரத்தி, நித்ய பூஜை, அகண்ட நாம ஜபம், தாலாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை ஆஸ்ரமத் தலைவரும், ஓய்வு பெற்ற நீதியரசருமான டி.எஸ்.அருணாச்சலம் தலைமையில், விழாக் குழுவினர் செய்து வருகின்றனர் என்றனர்.
 பேட்டியின்போது, ஆஸ்ரமத் தன்னார்வலர் ஆர்.எஸ்.இந்திரஜித் மற்றும் தன்னார்வலர்கள், ஆஸ்ரம ஊழியர்கள் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com