திருப்பத்தூர் அருகே புக்குத்திப்பட்டான் நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே புலிக்குத்திப்பட்டான் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் அருகே புக்குத்திப்பட்டான் நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே புலிக்குத்திப்பட்டான் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் புலிக்குத்திப்பட்டான் நடுகல் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
 இதுகுறித்து க.மோகன்காந்தி கூறியதாவது:
 திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலைக்குச் செல்லும் சாலையில் குரும்பேரிக்கு அருகில் உள்ளது நாயக்கனூர் எனும் சிற்றூர். இந்த ஊரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், சிவபாலன் மற்றும் ஆய்வு மாணவி செüமியா ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில், களஆய்வினை மேற்கொண்டோம்.
 இவ்வூர் மக்கள் வேடியப்பன் என்ற பெயரில் மூன்று நடுகற்களை வணங்கி வருகின்றனர். இதில், நடுவில் உள்ள நடுகல் வீரன் ஒருவன் புலியுடன் சண்டையிடுவது போல் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்லின் அமைப்பானது 4 அடி உயரமும், 3.5 அடி அகலமும் கொண்டதாகக் காட்சி தருகிறது. வீரன் வலது பக்க கொண்டையிட்டுள்ளான். காதுகளில் குண்டலமும் காணப்படுகின்றது. வீரனின் இடது கை புலியின் வாயில் உள்ளது. வலது கையிலுள்ள நீண்ட வாளினால் புலியின் வயிற்றைக் குத்துகிறான் வீரன். இடை கச்சில் குறுவாள் உள்ளது. புலியின் மேல் கால்கள் இரண்டும் வீரனின் இடது கையினைப் பிடித்துள்ளன. வாய் கையினைக் கெüவி (கடித்தல்) இருக்கிறது.
 பின் கால்கள் மூலம் நின்ற கோலத்தில் புலி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தலையின் மேற்பகுதியில் இறந்த வீரனை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய ஊருக்குள் புகுந்து மக்களையும், கால்நடைகளையும் கொன்ற கொடிய புலியைக் கொன்று தானும் இறந்து போன வீரனுக்கு இந்த நடுகல் வைக்கப்பட்டுள்ளது.
 இவ்வூரானது ஜவ்வாதுமலை அடிவாரப் பகுதி என்பதால், பழைய காலத்தில் ஏராளமான புலிகள் இருந்திருக்கும் என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.
 மேலும், ஜவ்வாது மலை, அதன் அடிவாரப் பகுதிகளில் புலியூர், புலிமடு, புலிக்குகை, புலிக்குட்டை போன்ற ஊர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஊரினைக் காத்து உயிர்விட்ட வீரனை இன்றும் இவ்வூர் மக்கள் வணங்குகின்றனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com