விதிமுறைக்கு உள்பட்ட மானிய திட்டங்களை நிறுத்துவதில்லை: முதல்வரின் குற்றச்சாட்டுக்கு கிரண் பேடி பதில்

விதிமுறைக்கு உள்பட்டு வரும் மானியத் திட்டங்களை ஆளுநர் மாளிகை ஒருபோதும் நிறுத்துவதில்லை என்று புதுவை முதல்வரின் குற்றச்சாட்டுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதிலளித்தார்.
விதிமுறைக்கு உள்பட்ட மானிய திட்டங்களை நிறுத்துவதில்லை: முதல்வரின் குற்றச்சாட்டுக்கு கிரண் பேடி பதில்

விதிமுறைக்கு உள்பட்டு வரும் மானியத் திட்டங்களை ஆளுநர் மாளிகை ஒருபோதும் நிறுத்துவதில்லை என்று புதுவை முதல்வரின் குற்றச்சாட்டுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதிலளித்தார்.
 அரசு நிறுவனங்களின் மானியத்துக்கான கோப்புகளை ஆளுநர் கிரண் பேடி நிறுத்தி வைப்பதாகவும், கோப்புகளைத் திருப்பி அனுப்புவதாகவும் முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் இதே குற்றச்சாட்டை அவர் தெரிவித்தார்.
 இதற்குப் பதிலளிக்கும் வகையில், ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் சனிக்கிழமை மாலை வெளியிட்ட பதிவு:
 முதல்வர் நாராயணசாமி பத்திரிகையாளர்களிடம் ஆளுநர் மாளிகையின் நடவடிக்கைகள் குறித்து மீண்டும் குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.
 வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் பேரவை உறுப்பினர்களுக்கு உள்ளது என்றும், ஆளுநருக்கு அவ்வாறு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 புதுவை பொது நிதி விதி 230-இன்படி அனைத்து மானியங்களையும் ஆளுநர்தான் ஒதுக்கீடு செய்ய முடியும். அந்த விதியின்படியே கருத்துரு திட்டங்களை பரிந்துரைக்கும்படி அனைத்துத் துறைகளுக்கும் நிதித் துறை ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.
 விதிக்குள்பட்ட திட்டங்களை மட்டுமே ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும்படி நான் அனைத்துத் துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளேன்.
 எந்தத் திட்டமாக இருந்தாலும் விதிமுறைக்கு உள்பட்டுதான் செயல்பட முடியும். தணிக்கையின் போது, எதிர்ப்பு வரும் என்பதால் விதிகளை மீற முடியாது. நிதி விதிமுறைகளுக்கு உள்பட்டிருக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே ஆளுநரின் பணி.
 தற்போதைய அரசோ அல்லது முந்தைய அரசோ விதிமுறைகளை மீறி இருந்தால், உடனடியாகவோ அல்லது எதிர்காலத்திலோ நிதி தணிக்கையாளர்களுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.
 நான் எதற்காகவும் எந்தக் கோப்பையும் மறுத்தது இல்லை. விதிமுறைக்கு உள்பட்டு கருத்துரு திட்டங்களை அனுப்பிவைக்க வேண்டும் என்று மட்டுமே அறிவுறுத்தினேன். அதுதான் நடைமுறை.
 தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நிதி விதிகளை முறையாகப் படிக்க வேண்டும். புதுவை அரசு தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஏற்கெனவே வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
 மானிய நிதி அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு உள்பட்டது என்று விதிகள் கூறுகின்றன. யாருடைய மானியத்தையும் நான் நிறுத்தி வைப்பதில்லை. விதிமுறைக்கு உள்பட்ட வரும் திட்டங்களுக்கு ஆளுநர் மாளிகை நிச்சயம் ஒப்புதல் அளிக்கும் என கிரண் பேடி கூறியுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com