கஜா புயலால் சூறையாடப்பட்ட கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதி.
கஜா புயலால் சூறையாடப்பட்ட கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதி.

கோடியக்கரை சரணாலயத்தை சூறையாடிய கஜா: கவலையளிக்கும் வன விலங்குகளின் நிலை

கஜா புயலில் கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தின் வனப் பகுதி வரலாறு காணாத அளவில் பாதிக்கப்பட்டிருப்பது


கஜா புயலில் கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தின் வனப் பகுதி வரலாறு காணாத அளவில் பாதிக்கப்பட்டிருப்பது இயற்கை ஆர்வலர்களை வேதனையடையச் செய்துள்ளது. வனப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட அரிய வகை வன உயிரினங்களின் நிலையும் கவலையளிப்பதாக உள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் அமைந்துள்ள பசுமை மாறா காடு வெப்ப மண்டல எல்லைக் கோட்டில் அமைந்துள்ளது. சுமார் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ள இந்த வனப் பரப்பு வன உயிரின சரணாலயமாக திகழ்கிறது. இங்கு 240-க்கும் அதிகமான அரிய வகை மூலிகை இனங்கள், பாலை நில அரிய வகை மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. பசுமை மாறா காடான இப்பகுதியில் அரிய வகை மான் இனமான வெளிமான்கள் அதிக எண்ணிக்கையில் பாதுகாக்கப்படுகின்றன. 
இவை தவிர ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிமான்கள், மட்டக் குதிரைகள், குரங்கு, காட்டுப்பன்றி என பல இன காட்டு விலங்குகள் மற்றும் வெளிநாட்டு பறவைகள் வலசையிடும் சரணாலயமாகவும் திகழ்கிறது. இங்குள்ள மணல்மேடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் இயற்கை ஆர்வலர்களை வெகுவாக ஈர்க்கும். பாயிண்ட் காலிமர் என அழைக்கப்படும் இந்த சரணாலயம் உலக அளவில் சிறப்பு பெற்றது. இங்குள்ள உயிரினங்களைக் காண உள் மற்றும் வெளிநாட்டினர், சுற்றுலா பயணிகள் என பலரும் வந்து செல்கின்றனர்.
பல்வேறு சிறப்புகளுடைய இந்த சரணாலயம் கஜா புயலின் தாக்கத்தில் சிக்கி தன் சிறப்பு இயல்புகளை இழந்து நிற்கிறது. பசுமை மாறா காடுகளையுடைய இப்பகுதி கஜா புயலால் சூறையாடப்பட்டுள்ளன. உயர்ந்த மரங்கள், செடி, கொடிகள் என அனைத்தும் சேதமடைந்துள்ளன. பல மரங்கள் வேருடன் சாய்ந்தும், மரங்களின் கம்பீரம் சீற்றத்தால் பாதிப்படைந்து பட்ட மரங்களாக காணப்படுவது வேதனையளிக்கிறது.
கவலையளிக்கும் வன விலங்குகள்: வழக்கமாக மான்கள், குதிரைகள், குரங்குகள் என பல வன விலங்குகள் சாலைகளில் குறுக்கிடும் நிலை புயலுக்கு பின்னர் அரிதாகியுள்ளது. ஆயிரக்கணக்கில் சாலைகளில் திரியும் குரங்குகளின் எண்ணிக்கைக் கூட மிகக் குறைந்து காணப்படுகிறது. வனப் பகுதிக்குள், வனத்துறையினர் கூட சென்று பார்க்க முடியாத சூழல் நிலவுகிறது. புயலில் சிக்கிய விலங்குகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 
கஜா புயல் வீசிய வியாழக்கிழமை மாலை 3 மணி முதலே விலங்குகளின் சப்தமிடுதலை அதிகம் உணரப்பட்டதாக அப்பகுதியில் பணியாற்றும் அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்தார். புயல் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் திறன் விலங்குகளுக்கு இருப்பதால் அவை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றிருக்கலாம் என நம்புவதாக தெரிவித்தார். இத்தகவல், இயற்கை ஆர்வலர்களுக்கு ஆறுதலை தந்தாலும் கடல் பரப்பில் இருந்து மான், குதிரை போன்ற வன விலங்குகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 
தேவை ஆய்வு: வன விலங்குகள் வழக்கமாக நடமாடும் தடம் (பாதை), இரைத் தேடும் இடங்கள் போன்றவை அடர்ந்த முள் மரங்களால் தடைபட்டுள்ளன. இதனால், விலங்குகள் புயல் வீசிய நேரத்தில் பதுங்கி இருந்தாலும் பின்னர் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம். விலங்குகள் வெளியில் காணப்படுவது குறைந்துள்ளதால் அவை உயிருக்கு ஆபத்து இல்லாமல் இருப்பதை அறிய அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாகும்.

புயலில் விழுந்து கிடக்கும் பார்வையாளர் கோபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com