ஓசூர் காதல் தம்பதி ஆணவக் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது 

ஓசூரில் காதல் தம்பதியினர் ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
ஓசூர் காதல் தம்பதி ஆணவக் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது 

ஓசூர்:  ஓசூரில் காதல் தம்பதியினர் ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சூடுகொண்டலபள்ளி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் நந்தீஷ். பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த ஸ்வாதி என்பவரைக் காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டை விட்டு வெளியயேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் தம்பதிகள் ஓசூர் வந்து அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தனர். 

இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி முதல் நான்கு நாட்களாக இவர்கள் இருவரையும் காணவில்லையென்று காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஜலஹள்ளி பகுதியில் காவிரி ஆற்றில் இரண்டு பிணங்கள் மீட்கப்பட்ட தகவல் வெளியானது. அங்கு சென்று விசாரித்ததில் அவர்கள் ஓசூரைச் சேர்ந்த நந்தீஷ் - ஸ்வாதி தம்பதியினர்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.   

பின்னர் நடந்த விசாரணையில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த நந்தீஷை காதல் திருமணம் செய்த காரணத்தினால், ஸ்வாதி மற்றும் நந்தீஷ் இருவரையும் ஸ்வாதியின் தந்தை உள்ளிட்டவர்கள், ஏமாற்றி கர்நாடக மாநிலம் மாண்டியாவிற்கு காரில் அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்திருப்பது கண்டறியப்பட்டது. 

இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் ஸ்வாதியின் தந்தை மற்றும் மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஸ்வாதியின் சித்தப்பா உள்ளிட்ட மேலும் மூன்று பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

முன்னதாக கைது செய்யப்பட்ட ஸ்வாதியின் தந்தை உள்ளிட்டோரை ஞாயிறன்று ஓசூருக்கு அழைத்து வந்த போலீசார் குற்ற சம்பவங்களை செய்து காட்டச் சொல்லி, வீடியோ பதிவு செய்து கொண்டனர். 

தலைமறைவாக உள்ளவர்களை பிடிப்பதற்காக தமிழக காவல்துறை சார்பில் 3 தனிப்படைகளும், கர்நாடக மாநில காவல்துறை சார்பில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டன. 

இந்நிலையில் காதல் தம்பதியினர் ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஓட்டுநர் சாமிநாதனை தமிழக காவல்துறையின் தனிப்படையினர் கைது செய்து, கர்நாடக காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com