சபரிமலையில் தொடர் போராட்டம்: வாழ்வாதாரத்தை இழந்த தமிழக டோலி தொழிலாளர்கள்

சபரிமலையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தால் வயதான பக்தர்களை கோயிலுக்கு டோலியில் தூக்கி கொண்டு செல்லும் தமிழக தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பம்பையிலிருந்து செல்லும் வயதான பக்தரை டோலியில் சுமந்து செல்லும் தொழிலாளர்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பம்பையிலிருந்து செல்லும் வயதான பக்தரை டோலியில் சுமந்து செல்லும் தொழிலாளர்கள்.


சபரிமலையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தால் வயதான பக்தர்களை கோயிலுக்கு டோலியில் தூக்கி கொண்டு செல்லும் தமிழக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 
அனைத்து வயதுப்பிரிவு பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பின் எதிரொலியால் அப்பகுதியில் போராட்டம், மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவற்றால் பதற்ற நிலை நீடித்து வருகிறது. இந்த பிரச்னையால் சாலையோர வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள், டோலி சுமக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் வயதான மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் பம்பையிலிருந்து சந்நிதானத்திற்கு செல்ல செங்குத்தான மலையில் 5 கிலோ மீட்டர் தொலைவு செல்வதற்காக உருவானது டோலி யாத்திரை. இரண்டு தடிமனான மரக் கம்புகள் நடுவில் ஒரு நாற்காலியில் பக்தரை அமர வைத்து, நான்கு பேர் செங்குத்தான மலையில் தூக்கி செல்வார்கள். 
இதற்காக சபரிமலை அடிவார பகுதியான பம்பையில் சுமார் 250 டோலிகள் உள்ளன. இதனை நம்பி 2,500 டோலி தொழிலாளர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். பம்பையில் உள்ள தேவஸ்சம் போர்டு அலுவலகத்தில் டோலி சுமக்கும் தொழிலாளர்களாக பதிவு செய்து கொண்டு, அடையாள அட்டை பெறவேண்டும். டோலி மூலம் ஐயப்ப தரிசனம் செய்யும் பக்தர்கள் கோயிலுக்கு போய் வர ரூ.4,200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் 200 ரூபாய் தேவஸ்சம் போர்டுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும். 
இதுகுறித்து தென்காசியைச் சேர்ந்த டோலி தொழிலாளர் அய்யனார்(42) கூறியது: 
5 கிலோ மீட்டர் தூரம் பயணிப்பது கஷ்டம்தான். அதனால் ஐயப்பனை மனதால் நினைத்து செல்வோம். ஆங்காங்கே நிறுத்தி எலுமிச்சை சோடா பானம் குடித்து களைப்பைப் போக்கிக் கொள்வோம். ஒரு நாளைக்கு எங்களால் இரண்டு நடை மட்டும்தான் செல்ல முடியும். அதன் பிறகு மிகவும் களைத்து விடுவோம். வரும் வருவாயில் டோலி தூக்கிச் சென்ற நான்கு பேர்களும் பிரித்துக்கொள்வோம் என்றார். 
நாகர்கோவிலைச் சேர்ந்த கணேசன் (45)கூறியது: தற்போது நாள்தோறும் சபரிமலைப் பகுதியில் நடைபெறும் போராட்டம் காரணமாக டோலியில் செல்லும் பக்தர்கள் கோயிலுக்கே வருவதில்லை. ஆண்டுதோறும் வருகை தரும் பக்தர்களிடம் தொடர்பு கொண்டால், இந்த ஆண்டு வரவில்லை என்கின்றனர். 
இதனால் கோயில் நடை திறந்து 5 நாட்களாகியும், பக்தர்கள் கூட்டம் குறைவாலும், வருமானமில்லாமல் இருக்கிறோம். இதே நிலை நீடித்தால், எங்கள் பாடு திண்டாட்டம்தான். இந்த ஆண்டு, சபரிமலை பிரச்னை எங்கள் தோள்களில் கூடுதல் சுமையை கொடுத்துள்ளது. சொந்த ஊருக்கே திரும்ப வேண்டியதுதான் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com