கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகளைக் காக்கும் வழிமுறைகள்

கஜா புயலால் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் சில உள்மாவட்டங்களில்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகளைக் காக்கும் வழிமுறைகள்

ஒரத்தநாடு: கஜா புயலால் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் சில உள்மாவட்டங்களில் விவசாயப் பயிர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இதில் நீண்ட காலப் பயிரான தென்னையில் ஏற்பட்ட பாதிப்பு, தென்னையை மட்டுமே சார்ந்துள்ள இப்பகுதி விவசாயிகளை பெரும் சேதத்துக்குள்ளாக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. தென்னையில் புயலின் பாதிப்பு பல நிலைகளில் காணப்படுகிறது. 
இத்தகைய பாதிப்புகளைச் சீரமைத்து, புனரமைக்க வாய்ப்புள்ள தென்னையைக் காப்பாற்ற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், தொழில்நுட்பங்கள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான தஞ்சாவூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலைய முதன்மையர் மு. பாண்டியன் கூறியது:
முற்றிலும் சேதமடைந்த தென்னை மரங்களை அப்புறப்
படுத்திவிட்டு, மற்ற தென்னை மரங்களுக்கு நீர்ப்பாசனம் மேற்கொள்ள வழிவகுக்க வேண்டும். நெட்டை மற்றும் குட்டை ரகங்களின் வயது 5 முதல் 10 ஆண்டுகளுக்கு உள்பட்டு வேருடன் சாய்ந்து குறைந்த சேதமுள்ள, மீண்டும் வளர வாய்ப்புள்ள மரங்களை மறுபடியும் நடுவதன் மூலம் மரங்களைக் காப்பாற்றலாம். 
அதாவது, தூர்பகுதி உடையாத, வேருடன் சாய்ந்திருக்கும் தென்னை மரங்களின் உடைந்த மட்டைகள் மற்றும் தென்னங்குலைகள் அனைத்தையும் சேதமின்றி கூரிய அரிவாள் கொண்டு அறுத்து அகற்றிவிட வேண்டும். மரத்தின் குருத்துப் பகுதியில் 6 முதல் 7 மட்டைகள் மட்டும் இருக்கும்படி வெட்டிவிட வேண்டும். பிறகு வேர் பகுதியை ஒட்டி மரம் சாய்ந்த பகுதியின் எதிர்ப்பகுதியில் மண்ணைப் பறித்து ஆழமாகக் குழி எடுக்க வேண்டும். 
பின்னர், மரங்களை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு நிமிர்த்தி வேர்ப்பகுதியில் மண் கொண்டு நிரப்ப வேண்டும். இயந்திர உதவியுடன் நன்கு அழுத்திவிட்டு வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். புதிய குருத்து வரத் தொடங்கிய உடன் தென்னைக்குரிய இயற்கை மற்றும் ரசாயன உர மேம்பாட்டு முறைகளைக் கையாண்டு பராமரிக்க வேண்டும். 30 முதல் 40 வயதுடைய தென்னைகள் வேர்ப்பகுதி பாதிப்படையாமல் சாய்ந்திருந்தாலும், அதன் வயது முதிர்வு காரணமாக அதை மீண்டும் நடத் தேவையில்லை. அவ்வகை தென்னைகளை அகற்றிவிட்டு புதிய கன்றுகளை 3 ஷ் 3 ஷ் 3 அடி என்ற அளவில் குழி எடுத்து 15 நாள்கள் முதல் ஒரு மாதம் வரை குழியை ஆறவிட்டு அதன் பிறகு அவசியம் ஆழ நடவு செய்ய வேண்டும். 
கீழே சாயாத தென்னைகளில் இருக்கும் ஒடிந்த மட்டைகள், சேதமடைந்த தென்னங்குலைகள் அனைத்தையும் கூரிய அரிவாள் கொண்டு இதர மட்டைகள் மற்றும் குலைகளுக்குச் சேதமின்றி அகற்ற வேண்டும். நல்ல நிலையில் உள்ள குலைகள் மற்றும் மட்டைகளைத் தொந்தரவு செய்யக்கூடாது.
பெரும்பாலான சாயாத தென்னைகளில் குருத்து புயலால் பாதிக்கப்பட்டு தொங்குவதால் அதையும் கூரிய அரிவாள் கொண்டு அப்புறப்படுத்த வேண்டும். பின்னர் குருத்துப்பகுதி நன்கு நனையும்படி 0.2% காப்பர் ஆக்ஸி குளோரைடு கரைசலை ஊற்ற வேண்டும். இதைச் செய்யத் தவறும்பட்சத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த குருத்துப்பகுதி நாளடைவில் மழையில் நனைந்து அழுகிவிடும். மேலும், அது குருத்துப்பகுதியின் அடிப்பகுதி வரை சென்றடைந்து, 
குருத்தழுகல் நோய் ஏற்பட்டு தென்னை இறக்க வாய்ப்புள்ளது. 
இத்தகைய தென்னைகளுக்கு வட்டப்பாத்தி முறையில் தொடர்ந்து நீர் அளித்து வறட்சி இல்லாமல் பராமரிக்க வேண்டும். புது குருத்து வரத் தொடங்கியவுடன் இயற்கை மற்றும் ரசாயன உரங்களை அளித்து பராமரிக்க வேண்டும். மரங்கள் தற்போது புயலின் அதிர்ச்சியில் உள்ளதால், மரங்கள் சாதக சூழ்நிலைக்கு வருவதற்குக் குறைந்தபட்சம் ஓராண்டு காலமாவது ஆகும் என்பதை தென்னை விவசாயிகள் மனதில் கொள்ள வேண்டும். மரங்களில் ஒளிச்சேர்க்கைத் திறனும் தற்போது மிகக் குறைவாக இருப்பதிலிருந்து மரங்கள் அதிர்ச்சியில் உள்ளது என்பதும், இன்னும் சாதாரண நிலைக்குத் திரும்பவில்லை என்பதும் தெளிவாகிறது.
ஐந்து வயதுக்கு மேற்பட்ட மரம் ஒன்றுக்கு 1.5 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 2 கிலோ பொட்டாஷ், அதனுடன் 50 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து மரத்துக்கு எந்தப் பகுதி வேர் பாதிக்கப்படாமல் இருக்கிறதோ, அந்தப் பகுதியில் ஒரு அடி நீள அகல ஆழ அளவில் அரை வட்டக் குழி எடுத்து உரத்தை இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com