குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை; டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதால், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை; டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு


சென்னை: குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதால், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,  தென் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும் மாலத்தீவுப் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி  நிலவுகிறது.

இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை,  தென் தமிழகத்தில் பரவலாகவும், வடதமிழகத்தில் ஒரு சில  இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.

கன மழையைப் பொறுத்தவரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும்  புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், புதுவை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும். 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 10 செ.மீ. மழையும், சிதம்பரம், சீர்காழியில் 6 செ.மீ. மழையும், சேத்தியாதோப்பு, மயிலாடுதுறையில் 5 செ.மீ. மழையும், காட்டுமன்னார்கோவில், திருவிடைமருதூரில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.


குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இருக்காது. கிழக்கு திசையில் இருந்து வரும் காற்று வடக்கு நோக்கி சற்று நகர்ந்தால் தான் வட தமிழகப் பகுதிகளில் மழை பெய்யும். இல்லையென்றால் தென் தமிழகப் பகுதிகளுக்கே மழை வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார்.

அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவையில் பெய்திருக்கும் மழையின் அளவான 31 செ.மீ. இந்த காலக்கட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 35 செ.மீ. இது 15 சதவீதம் குறைவு. இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது. பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com