மகாத்மா காந்தியின் 150- ஆவது பிறந்த தினம்: உதகை-கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கம்

மகாத்மா காந்தியின் 150- ஆவது பிறந்த தினத்தையொட்டி தெற்கு ரயில்வே சார்பில் நீராவியில் இயங்கும் சிறப்பு மலை ரயில் உதகை-கேத்தி இடையே செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டது.
உதகை- கேத்தி வரையிலான சிறப்பு மலை ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார் உதகை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ்.
உதகை- கேத்தி வரையிலான சிறப்பு மலை ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார் உதகை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ்.


மகாத்மா காந்தியின் 150- ஆவது பிறந்த தினத்தையொட்டி தெற்கு ரயில்வே சார்பில் நீராவியில் இயங்கும் சிறப்பு மலை ரயில் உதகை-கேத்தி இடையே செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டது.
சர்வதேசப் புகழ் வாய்ந்த நீலகிரி மலை ரயில் அண்மைக் காலமாக சிறப்பு நிகழ்வுகளையொட்டி கூடுதலாக இயக்கப்படுகிறது. அத்துடன் முழு ரயிலையும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் சார்ட்டர்ட் ரயில் வசதியும் உள்ளது. 
இவற்றுடன் உதகை- கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் தற்போது இயக்கப்படுகிறது. விரைவில் குன்னூரிலிருந்து ரன்னிமேடு ரயில் நிலையம் வரை இத்தகைய சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. 
ஆனால் இவையெல்லாம் ஃபர்னஸ் ஆயில், டீசல் ஆகிய எரிபொருள்களால் இயங்கும் என்ஜின்களைக் கொண்டவை. இந்நிலையில், மகாத்மா காந்தியின் 150 ஆவது ஆண்டு பிறந்த தினத்தையொட்டி, உதகை- கேத்தி இடையே நீராவியால் இயங்கும் என்ஜினைக் கொண்டு சிறப்பு மலை ரயில் செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டது. 
உதகையிலிருந்து காலை 10 மணிக்குப் புறப்பட்ட இந்த ரயில் 10.30 மணிக்கு கேத்தி ரயில் நிலையத்தைச் சென்றடைந்தது. மறு மார்க்கத்தில் அங்கிருந்து காலை 11 மணிக்குப் புறப்பட்டு 11.30 மணிக்கு உதகையை வந்தடைந்தது. 
முதல் வகுப்பில் 40 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 40 இருக்கைகளுமாக 80 பயணிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட்டது. இதில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்தனர். 
இதில் முதல் வகுப்புக்கு ரூ. 400, இரண்டாம் வகுப்புக்கு ரூ.300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அனைத்துப் பயணிகளுக்கும் தலா ரூ. 100 மதிப்பிலான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு ரயிலின் இயக்கத்தை உதகை சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த மலை ரயில் பயணம் தொடர்பாக கனடாவைச் சேர்ந்த சாரா என்ற சுற்றுலாப் பயணி கூறுகையில், உலகின் பல்வேறு பகுதிகளில் மிக வேகமான ரயில்களிலும்கூட பயணம் செய்துள்ளேன். ஆனால் நீலகிரி மலை ரயில் பயணம் சிறப்பான அனுபவமாக இருந்தது. மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மலை ரயில் பயணத்தை என்றும் மறக்க முடியாது என்றார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நீலகிரி பாரம்பரிய நீராவி ரத அறக்கட்டளையின் அறங்காவலர் நடராஜன் கூறுகையில், உதகைக்கு காட்சிப் பொருளாகக் கொண்டுவரப்பட்ட நீராவி என்ஜினை இயக்கிய பெருமை ரயில்வே நிர்வாகத்துக்கு உள்ளது. 
தற்போது உதகையில் இரண்டாவது சீசன் தொடங்கியுள்ள நிலையில் ரயில்வே துறையுடன் இணைந்து சுற்றுலாத் துறை செயல்பட்டால், ரயில் சுற்றுலாவில் அதிக அளவிலான வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்க முடியும் என்றார்.
உதகையில் செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட நீராவி என்ஜின் 1914 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாகும். இந்த என்ஜின் நீலகிரியில் கடந்த 1918 ஆம் ஆண்டிலிருந்து இயக்கப்பட்டது. அந்த வகையில் இந்த நீராவி என்ஜினுக்கும் இந்த ஆண்டு நூற்றாண்டு விழா ஆகும். இந்திய ரயில்வேயில் தற்போது இயங்கும் நிலையிலுள்ள ஒரே நீராவி என்ஜின் இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com