ரகுபதி ஆணைய விவகாரம்: அரசுக்கு உயர்நீதின்றம் கேள்வி

ரகுபதி ஆணையத்தின் ஆவணங்களை முறையாகப் பரிசீலிக்காமல், அவை நேரடியாக லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டதா என உயர்
ரகுபதி ஆணைய விவகாரம்: அரசுக்கு உயர்நீதின்றம் கேள்வி


ரகுபதி ஆணையத்தின் ஆவணங்களை முறையாகப் பரிசீலிக்காமல், அவை நேரடியாக லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டதா என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதிய தலைமைச் செயலக வழக்கு: புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் கடந்த 2011-ஆம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ரகுபதி ஆணையம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரை முருகன் ஆகியோருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக் கோரியும், ரகுபதி ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி 3 பேரின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ரகுபதி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்து, ஆணையத்தின் ஆவணங்களைப் பரிசீலித்து தேவைபட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசு ரகுபதி ஆணையத்தின் ஆவணங்களை முறையாக பரிசீலிக்காமல் நேரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்றி அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதித்துச் செயல்படவில்லை. எனவே, தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அரசாணையை ரத்து செய்யவேண்டும்: இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நீதிபதி ரகுபதி ஆணையத்தின் ஆவணங்களை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி முறையாக பரிசீலிக்காமல் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு அனுப்பியிருப்பது சட்ட விரோதமானது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் உள்பட அமைச்சர்கள் பலர் பேசி வருகின்றனர். எனவே, இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், இது தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணைக்குத்தான் உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்குகள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்றார்.
நாளை மீண்டும் விசாரணை: இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ரகுபதி ஆணையத்தின் ஆவணங்களை முறையாகப் பரிசீலிக்காமல் நேரடியாக லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு அனுப்பப்பட்டதா, அந்த ஆவணங்கள் எப்போது அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com