ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மைய மாணவர்கள் 5 பேர் இடைநீக்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் மாணவர்கள் 5 பேர்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் மாணவர்கள் 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ், இயங்கும் இந்த மையத்தின் இயக்குநராக இருந்த மதன்மோகன்கோயலின் பதவிக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்த மையத்துக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்படாமல் உள்ளது. தற்போது தற்காலிக இயக்குநராக தங்கலம்லியான் செயல்பட்டு வருகிறார். 
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்துக்கு, நிரந்தர இயக்குநரை நியமனம் செய்ய வேண்டும், ராஜீவ் காந்தியின் புகைப்படத்தையே மீண்டும் மையத்தின் இலச்சிணையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 5 மாணவர்களை மைய நிர்வாகம் புதன்கிழமை இடைநீக்கம் செய்தது. இந்நிலையில், மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், மாணவர்கள் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் கூறுகையில், நிரந்தர இயக்குநரை நியமிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களை பணியவைக்கும் வகையில் மாணவர்கள் மகேஷ்குமார், கோபிநாத், சுசித்ரா, முஷாபர் அகமது, குப்புபாலாஜி ஆகிய ஐந்து பேரை நிர்வாகத்தினர் இடைநீக்கம் செய்துள்ளனர். ஏற்கெனவே நூலகத்தை இரவு 12 மணி வரை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். அதில் ஈடுபட்டவர்களையும் தற்போது இடைநீக்கம் செய்துள்ளனர். போராட்டத்தை ஒடுக்கவே நிர்வாகம் இந்த நடைமுறையை கடைப்பிடித்துள்ளது.
இடைநீக்கத்தை திரும்பப் பெறவும், நிரந்தர இயக்குநரை நியமிக்கவும் வலியுறுத்தி நடைபெறும் எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com