அடிபணியாது ஆளுநர் மாளிகை: வார இதழ் செய்தி குறித்து விளக்கம்

கோழைத்தனமான செயல்களுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.
அடிபணியாது ஆளுநர் மாளிகை: வார இதழ் செய்தி குறித்து விளக்கம்

கோழைத்தனமான செயல்களுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.
 இதுகுறித்து, ஆளுநர் மாளிகை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
 சட்ட ரீதியான நடவடிக்கைகள்: அருப்புக்கோட்டை கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மாண்புமிகு ஆளுநர் அல்லது ஆளுநர் மாளிகையை எந்தவொரு உண்மையும் இல்லாமல், முழுவதும் பொய்யான முறைகளில் சிலர் இணைத்துப் பேசி வருகிறார்கள். காவல் துறையிடம் அவர் அளித்துள்ள அறிக்கை மட்டுமே, உண்மை என்ன என்பதை வெளிக் கொண்டு வரும். மாநிலத்தின் முதல் குடிமகனாக விளங்கும் ஆளுநர் மீது அவதூறான தாக்குதல்களை நடத்திய பிறகும் மிகவும் அமைதியாக இருந்தோம். ஆனால், அது தொடர்ந்ததால் இப்போது சட்டத்தின் வழியே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் பத்திரிகை சுதந்திரத்தை மிரட்டுவதற்காகச் செய்யப்படுகிறது எனக் கூறுவது வேடிக்கை.
 எல்லை உள்ளது: பேராசிரியை விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்து வருவதுடன், புலன்விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. நிர்மலா தேவி காவல் துறையிடம் அளித்த உண்மையான வாக்குமூலம் என்ன என்பதைக் கூட உறுதி செய்து கொள்ளாமல் புலனாய்வு என்ற பெயரில் நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பத்திரிகைத் துறையின் எந்த விதிகளையும் பின்பற்றாமல் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர்.
 ஆளுநர் மாளிகைக்கு வந்ததில்லை: பேராசிரியை நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு ஒரு முறைகூட வந்ததில்லை. அவர் இங்கு யாருக்கும் அறிமுகம் இல்லை. அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த போதுகூட அங்குள்ள பல்கலைக்கழக தங்கும் விடுதிக்கு ஆளுநர் சென்றதில்லை. ஆளுநருடன் அவரது செயலாளர் எங்கும் சென்றதில்லை. ஆனால், இந்த உண்மைகளை அறிந்திராத சில மதிப்புமிக்க மனிதர்கள் கூட வார இதழில் வெளியான உண்மைக்கு மாறான செய்திகளுக்கு ஆதரவளித்து செயல்படுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
 ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கு இடையே உள்ள சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்ள முடியும். ஆனால், ஆளுநர் போன்ற அரசமைப்புச் சட்டத்தின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவரை நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ மிரட்ட இயலாது. தமிழகத்தின் மிக உயர்ந்த அலுவலமாக விளங்கும் ஆளுநர் மாளிகை இதுபோன்ற கோழைத்தனமான செயல்களுக்கு ஒருபோதும் அடிபணியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com